தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Jan 2018 4:30 AM IST (Updated: 1 Jan 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

கொங்கணாபுரம் பகுதியில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.

எடப்பாடி,

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் தனிநபர் கழிப்பிடம் கட்டு்ம் பணி, மண்புழு உரம் தயாரிப்பு, செடி வளர்ப்பு உள்பட பல்வேறு திட்டப்பணிகளை கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார். பின்னர், அவர் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.17 லட்சம் மதிப்பில் செடி வளர்க்கும் பணியை பார்வையிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மேலும், அனைத்து ஊராட்சிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து புதுப்பாளையம் ஊராட்சியில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை கலெக்டர் ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் மண்புழு உரம் தயாரிப்பு கூடம், தனிநபர் கழிப்பிடம் கட்டப்பட்டதை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் வெள்ளாளபுரம் ஊராட்சியில் தாய் திட்டம் மூலம் போடப்பட்ட தார்சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நிகழ்ச்சியில், சங்ககிரி உதவி கலெக்டர் ராமதுரைமுருகன், தாசில்தார் கேசவன், அட்மா திட்டக்குழுதலைவர் கரட்டூர்மணி, உதவி செயற்பொறியாளர் அருள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், குமரேசன், பொறியாளர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story