மனைவியை உயிரோடு எரித்து கொன்றவருக்கு 5 ஆண்டு ஜெயில் மும்பை கோர்ட்டு தீர்ப்பு
மனைவியை உயிரோடு தீ வைத்து எரித்து கொன்ற கணவருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து மும்பை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மும்பை,
மும்பை சயான் பகுதியை சேர்ந்தவர் இர்பான் சேக் (வயது 36). இவரது மனைவி மீனா. இந்த தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணவன்– மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், சம்பவத்தன்று தரையில் படுத்து தூங்குமாறு மீனாவை இர்பான் சேக் கேட்டு கொண்டார். இதனை ஏற்க மறுத்த மீனா, கட்டிலில் படுத்தார்.
இதனால், ஆத்திரம் அடைந்த இர்பான் சேக், மீனாவை கடுமையாக தாக்கியதுடன், அவர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். வலி தாங்க முடியாமல் அலறி துடித்த மீனா, கணவரை நோக்கி ஓடினார். இதில், இர்பான் சேக்கின் கையிலும் லேசான தீக்காயம் ஏற்பட்டது. எனினும், அவர் அதனை பொருட்படுத்தாமல், மனைவியை தள்ளி விட்டு விட்டு ஓடிவிட்டார்.
பின்னர், ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மீனா, பரிதாபமாக இறந்துபோனார். இந்த ஒட்டுமொத்த சம்பவமும், அவர்களது மகன் கண் எதிரிலேயே நடைபெற்றது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இர்பான் சேக்கை கைது செய்து உள்ளூர் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்களது 10 வயது மகன் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தான். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனைவியை ஈவு, இரக்கமின்றி உயிரோடு எரித்து கொன்ற இர்பான் சேக்கை குற்றவாளி என்று அறிவித்ததுடன், அவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.