புத்தாண்டு தினத்தில் சோகம்: 2 மாணவர்கள் விபத்தில் பலி


புத்தாண்டு தினத்தில் சோகம்: 2 மாணவர்கள் விபத்தில் பலி
x
தினத்தந்தி 1 Jan 2018 11:15 PM GMT (Updated: 1 Jan 2018 6:42 PM GMT)

சங்ககிரி அருகே சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். புத்தாண்டு தினத்தில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

சங்ககிரி,

சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா தங்காயூர் கிராமம் மட்டம்பட்டியானூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம், லாரி டிரைவர். இவருடைய மகன் சந்திரன் (வயது 20). இவர் திண்டுக்கல்லில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் பாடப்பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கி படித்த இவர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இவருடைய நண்பர் தங்காயூர் கிராமம் பழையூரான்காடு பகுதியை சேர்ந்த விவசாயி பழனியப்பனின் மகன் சுபாஷ் (19). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர்கள் இருவரும் நேற்று தங்காயூரில் உள்ள நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு அதில் சங்ககிரிக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சந்திரன் ஓட்டி வந்தார்.

மாலை 5 மணியளவில் மஞ்சுக்கல்பட்டி கிராமம் கள்ளுக்கடை கொணஞ்சான்காடு பகுதியில் வந்தபோது, மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. அங்கிருந்த விவசாய நிலத்தின் கல்கட்டு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர்கள் இருவரின் தலையும் கல்லில் மோதியதில் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் சந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், சங்ககிரி போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த சுபாசை மீட்டு உடனடியாக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சுபாஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விபத்தில் பலியான மாணவர் சுபாசின் தந்தை பழனியப்பன், நடக்கமுடியாத நிலையில் வீட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் மாணவரின் தாயாரும், சகோதரரும் சுபாசின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.

அதே போல் மாணவர் சந்திரனின் உடல் சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. புத்தாண்டு தினத்தில் தனது மகனை இழந்து விட்டோமே என்று அந்த மாணவரின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த விபத்து மாணவர்களின் சொந்த கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story