பட்டாசு தொழிலை பாதுகாக்க கோரி சிவகாசியில் நாளை கடை அடைப்பு போராட்டம்
பட்டாசு தொழிலை பாதுகாக்க கோரி சிவகாசியில் நாளை கடை அடைப்பு போராட்டம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி,
சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 859 பட்டாசு ஆலைகள் மத்திய, மாநில அரசு அனுமதியுடன் இயங்கி வருகிறது. இந்த தொழிலில் நேரடி மற்றும் சார்பு தொழில்கள் மூலம் சுமார் 8 லட்சம் பேர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்தியா முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கொல்கத்தாவை சேர்ந்த தத்தா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கடந்த 26–ந்தேதி முதல் ஆலைகளில் பட்டாசு உற்பத்தியை நிறுத்திவிட்டனர். பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சிவகாசியில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.பி. அழகிரிசாமி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் ஞானசேகரன், தி.மு.க.வை சேர்ந்த முனியாண்டி, உதயசூரியன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சதுரகிரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஜீவா உள்பட பிற அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலைகள் தற்போது மூடப்பட்டுள்ளதால் அதில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துக்கூறவும், இந்த தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை போக்கி, பட்டாசு தொழிலை பாதுகாக்கவும் கோரி நாளை (புதன்கிழமை) சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்கள், காய்கறி மார்க்கெட் ஆகியவற்றை அடைத்து போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் அன்று காலை 10 மணிக்கு சிவகாசி பஸ் நிலையம் முன்பு அனைத்துக்கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்தனர்.