விருதுநகர்–சாத்தூர் இடையே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை
விருதுநகர்–சாத்தூர் இடையே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணியை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
தொழில்துறையில் பின்தங்கி உள்ள தென் மாவட்டங்களை தொழில்மயமாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில் கடந்த 2008–ம் ஆண்டு விருதுநகர்–சாத்தூர் இடையே சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியும் தொடங்கியது.
ஆனால் 2 ஆண்டுகளில், மத்தியில் இருந்த ஐக்கிய முற்போக்கு அரசால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா விருதுநகர் மாவட்டத்தில் சிப்காட் சார்பில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து விருதுநகர்–சாத்தூர் இடையே தொழிற்பேட்டை அமைப்பதற்காக 2,500 ஏக்கர் நிலம் கண்டறியும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக தனி மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்த பணி தொடங்கப்பட்டு தற்போது முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. தொழிற்பேட்டைக்காக கண்டறியப்பட்டுள்ள இடங்கள் அனைத்தும் அரசு நிலங்களாகவே உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
நிலம் கண்டறியும் பணி முடிவடைந்துவிட்ட நிலையில் அடுத்தகட்டப்பணிக்காக எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. தொழிற்பேட்டை அமைப்பது என முடிவு எடுக்கப்பட்டதன் காரணமே படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், தொழில் தொடங்குவதன் மூலம் இம்மாவட்டம் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையவேண்டும் என்பதற்காகத்தான். ஏற்கனவே மத்திய அரசின் சிறப்பு பொருளாதார மண்டல திட்டம் கைவிடப்பட்டுவிட்ட நிலையிலும், சாத்தூரில் சிப்காட் சார்பில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டுவிட்ட நிலையிலும் ஜெயலலிதா அறிவித்த சிப்காட் தொழிற்பேட்டை திட்டமும் தொடக்க நிலையிலேயே முடங்கி விட்டது. இதனால் மாவட்ட மக்களுக்கு இத்திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தநிலையில் தற்போது மத்திய அரசு தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தை பின்தங்கிய மாவட்டமாக தேர்வு செய்து முன்னோடி மாவட்டமாக ஆக்குவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக மத்திய அரசின் கூடுதல் செயலாளர் அந்தஸ்தில் உள்ள பிரவீன்குமார் என்ற அதிகாரியை நியமித்துள்ளது. இந்த அதிகாரியும் கடந்த மாதம் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி மாவட்டத்தில் நிறைவேற்ற வாய்ப்புள்ள திட்டங்கள் குறித்து ஒரு வரைவு திட்டம் தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே நிலம் கண்டறியப்பட்டு முடக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தினை முதலில் செயல்படுத்த வேண்டியது அவசியமானதாகும். மேலும் இத்திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு இடம் தயாராக உள்ள நிலையில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தான் பிரச்சினையாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே மத்திய அரசு விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கு முதலீடு செய்ய தயாராக உள்ள நிலையில் அந்த வாய்ப்பை மாநில அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
எனவே தமிழக அரசு விருதுநகர்–சாத்தூர் இடையே ஜெயலலிதா அறிவித்த சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணியை விரைவுபடுத்தி அதற்கான மதிப்பீட்டினை தயாரித்து மத்திய அரசிடம் இருந்து நிதி உதவி பெற்று தொழிற்பேட்டை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தமிழகத்தில் தொழில் முதலீட்டு மையம் தொடங்க மத்திய தொழில்துறை அமைச்சகம் முன்வந்த நிலையில் மாநில அரசு அதற்கான பரிந்துரையை அனுப்பாததால் அந்த திட்டம் தொழில்துறையில் பின்தங்கி உள்ள இந்த மாவட்டத்தில் செயல்பாட்டுக்கு வராத நிலை ஏற்பட்டது. எனவே தற்போது மத்திய அரசே விருதுநகர் மாவட்டத்தில் திட்டங்களை செயல்படுத்த முன்வந்துள்ள நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக அரசு மாவட்டத்தில் தொழில், விவசாயம், கல்வி ஆகிய துறைகளில் முன்னேற்றம் ஏற்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.