ஊத்துக்குளியில் பரிதாபம் கார் பள்ளத்தில் கவிழ்ந்து தேங்காய் வியாபாரி பலி


ஊத்துக்குளியில் பரிதாபம் கார் பள்ளத்தில் கவிழ்ந்து தேங்காய் வியாபாரி பலி
x
தினத்தந்தி 1 Jan 2018 10:30 PM GMT (Updated: 2018-01-02T00:50:09+05:30)

ஊத்துக்குளியில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தேங்காய் வியாபாரி பரிதாபமாக பலியானார்.

ஊத்துக்குளி,

ஊத்துக்குளி நேதாஜி வீதியை சேர்ந்த நாச்சிமுத்துவின் மகன் தங்கராஜ்(வயது 30). தேங்காய் வியாபாரியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு சொந்தமான தோட்டம் ஊத்துக்குளி–விஜயமங்கலம் சாலையில் காக்காப்பள்ளம் என்ற இடத்தில் உள்ளது.

நேற்று முன்தினம் தனது தோட்டத்துக்கு காரில் சென்ற தங்கராஜ், அங்கு வேலைகளை முடித்துவிட்டு நள்ளிரவில் வீட்டுக்கு புறப்பட்டார். காரை தங்கராஜ் ஓட்டி வந்தார். விஜயமங்கலம் சாலையில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கு அருகே கார் வந்த போது, காரின் முன்பக்கம் வலதுபுற டயர் திடீரென வெடித்தது.

இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த தடுப்பு கல் மீது மோதி, அருகில் இருந்த சுமார் 6 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. அப்போது, இரண்டு, மூன்று முறை கார் உருண்டதாக கூறப்படுகிறது. இதனால் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த தங்கராஜ், இடிபாடுகளுக்குள் சிக்கி, படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்தது நள்ளிரவு நேரம் என்பதாலும், அந்த வழியாக இரவு நேரத்தில் அதிகம் வாகன போக்குவரத்து இல்லாததாலும், விபத்து நடந்தது பற்றி உடனடியாக தெரியவில்லை.

இந்த நிலையில் நேற்றுகாலை அந்தவழியாக நடந்து சென்றவர்கள் ஒரு கார் பள்ளத்தில் கவிழ்ந்து கிடப்பதை பார்த்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல்கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

பின்னர், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த தங்கராஜின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story