ரெயில் என்ஜின் டிரைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் 7–வது சம்பள கமிஷனில் ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கான அலவன்சுகளை வழங்க வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை,
மத்திய அரசின் 7–வது சம்பள கமிஷனில் ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கான அலவன்சுகளை வழங்க வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஓடும் தொழிலாளர் பிரிவு தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். எஸ்.ஆர்.எம்.யூ. கோட்ட செயலாளர் ரபீக், முருகானந்தம், பேச்சிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அப்போது, ரெயில்வேயில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கு 7–வது சம்பள கமிஷனில் அலவன்சு உயர்த்தப்பட்டது. ஆனால், என்ஜின் டிரைவர்களுக்கு மட்டும் உயர்த்தப்படவில்லை. எனவே, ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கான ரன்னிங் அலவன்சை 1.1.2016 முதல் உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், 7–வது சம்பள கமிஷன் சம்பள விகிதப்படி அனைத்து அலவன்சுகளையும் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் கூடுதல் கோட்ட செயலாளர் ராம்குமார் நன்றி கூறினார்.