மதுரை அரசு ஆஸ்பத்திரியில் விபத்தில் இறந்த பெண்ணின் உடலுக்கு பதிலாக வேறொரு பெண்ணின் உடலை கொடுத்த ஊழியர்கள்


மதுரை அரசு ஆஸ்பத்திரியில் விபத்தில் இறந்த பெண்ணின் உடலுக்கு பதிலாக வேறொரு பெண்ணின் உடலை கொடுத்த ஊழியர்கள்
x
தினத்தந்தி 2 Jan 2018 3:45 AM IST (Updated: 2 Jan 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அரசு ஆஸ்பத்திரியில், விபத்தில் இறந்த பெண்ணின் உடலுக்கு பதிலாக வேறொரு பெண்ணின் உடலை ஊழியர்கள் உறவினர்களிடம் கொடுத்தனர். மயானத்தில் இறுதிச்சடங்கின் போது பார்த்த உறவினர்கள், உடல் மாறி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மதுரை,

மதுரை புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மனைவி அன்னலட்சுமி (வயது 60). ஒத்தக்கடை அருகே நடந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் உயிர் இழந்தார்.

இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உறவினர்களிடம் நேற்று உடல் ஒப்படைக்கப்பட்டது. உடலை உறவினர்கள் புதுத்தாமரைப்பட்டி மயானத்திற்கு இறுதிச்சடங்கிற்காக எடுத்துச் சென்றனர்.

மயானத்தில், உடலில் சுற்றப்பட்டிருந்த துணியை உறவினர்கள் எடுத்து பார்த்தபோது, அது அன்னலட்சுமியின் உடல் இல்லை என்றும், வேறொரு பெண்ணின் உடல் என்றும் தெரியவந்தது. இதனால் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அன்னலட்சுமியின் உறவினர்கள் அந்த உடலை எடுத்துக்கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் தான் உடல் மாற்றி கொடுக்கப்பட்டதாக கூறி, அங்கு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரும், போலீசாரும் அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது யாருடைய உடல் என்று விசாரித்தனர்.

அப்போது, மாற்றிக் கொடுக்கப்பட்டது திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியை சேர்ந்த ராமர் என்பவரது மனைவி கற்பகசெல்வியின் (30) உடல் என தெரியவந்தது.

கற்பகசெல்வி சில நாட்களுக்கு முன்பு மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார். அவருடைய உடலும் நேற்று பரிசோதனை முடிக்கப்பட்டு, அன்னலட்சுமியின் உடலின் அருகே வைக்கப்பட்டு இருந்தது.

ஊழியர்களின் கவனக்குறைவால் கற்பக செல்வியின் உடல் தவறாக அன்னலட்சுமியின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது தெரியவந்தது.

விசாரணைக்கு பின்னர் பிரேத பரிசோதனை அறை ஊழியர்கள், கற்பகசெல்வியின் உடலை பெற்றுக்கொண்டு, அன்னலட்சுமியின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story