நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 121 அடியாக சரிவு
முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்மட்டம் 121.30 அடியாக சரிந்துள்ளது.
தேனி,
தமிழக–கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்து உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. அந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேங்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி கடந்த 2014, 2015–ம் ஆண்டுகளில் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. 2016–ம் ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் நீர்மட்டம் உயர்வில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஒரு போகும் நெல் சாகுபடி பணிகள் கூட முழுமையாக நடைபெறவில்லை.
இந்நிலையில், கடந்த 2016–ம் ஆண்டும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. அதே நேரத்தில், கடந்த மாதம் பலத்த மழை பெய்து அணைக்கு தண்ணீர் அதிக அளவில் வந்த போதிலும், அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கும் மேல் மழை இல்லை. மழை ஓய்ந்ததால் நீர்வரத்து குறைந்துள்ளது.இதுபோன்ற காரணங்களால் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
கடந்த டிசம்பர் 3–ந்தேதி நீர்மட்டம் 130.20 அடியாக இருந்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 121.30 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு சுமார் 244 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர்மட்டம் என்பது தற்போதைய சூழ்நிலையில் முதல்போக நெல் சாகுபடிக்கு போதுமானதாக இருக்குமா? என்ற அச்சம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில் பயிர் விளைச்சல் அடைந்து இருந்தாலும், பல இடங்களில் பயிர் பால் பிடிக்கும் அளவில் உள்ளது. எனவே, மேலும் ஒரு மாத காலம் தண்ணீர் தேவைப்படும் என்ற சூழல் உள்ளது. அதேபோன்று, லோயர்கேம்ப்பில் இருந்து தேனி வரை முல்லைப்பெரியாற்றை நம்பியே பல குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவதால் கோடை காலம் வரும் முன்பே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
பலத்த மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே வரும் கோடையை சமாளிக்க தண்ணீர் போதிய அளவில் கிடைக்கும். அதே நேரத்தில் முதல் போகத்துக்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில், 2–ம் போக நெல் சாகுபடி நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது.