4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு 9–ந் தேதி ஆர்ப்பாட்டம்
4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு 9–ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அரசு பணியாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
விழுப்புரம்,
தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அய்யனார் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் தென்னரசு வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலாளர் அருணகிரி சிறப்புரையாற்றினார்.
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியத்தை கருவூலம் மூலம் வழங்க வேண்டும், விழுப்புரம் நகராட்சியில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இலவச குடியிருப்பு கட்டித்தர வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கொசுப்புழு ஒழிப்பு களப்பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.325 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டுக்குழு முடிவின்படி வருகிற 9–ந் தேதி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் சிவகுரு, குமரவேல், மாவட்ட துணைத்தலைவர்கள் புருஷோத்தமன், நடராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் முருகன் நன்றி கூறினார்.