விழுப்புரத்தில் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரம்,
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நேற்று காலை தென்னக ரெயில்வே மஸ்தூர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி கோட்ட உதவி செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தை நிர்வாக தலைவர் பழனிவேல் தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கோட்ட பொருளாளர் செல்வம், உதவி கோட்ட செயலாளர்கள் லிபின்ராஜ், கேசவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு பயணப்படி அலவன்சு தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும், பயணப்படி அலவன்சு தொகையை 1.1.2016 முதல் நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும், விதிமுறைப்படி ‘ரன்னிங்’ அலவன்சை கணக்கிட்டு வழங்க வேண்டும், அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திருச்சி கோட்ட முன்னாள் செயலாளர் மாதவன் உள்பட தென்னக ரெயில்வே தொழிலாளர் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கோட்ட தலைவர் மயில்வாகனன் நன்றி கூறினார்.