பிச்சாவரத்தில் படகுகளை இயக்குபவர்கள் தர்ணா போராட்டம்


பிச்சாவரத்தில் படகுகளை இயக்குபவர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2018 9:30 PM GMT (Updated: 2018-01-02T01:33:59+05:30)

சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் சுற்றுலா பயணிகள் படகில் சென்று சதுப்பு நிலக்காடுகளை பார்வையிடுவதற்காக சுற்றுலாத்துறை சார்பில் துடுப்பு மற்றும் மோட்டார் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பரங்கிப்பேட்டை,

சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் சுற்றுலா மையம் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் படகில் சென்று சதுப்பு நிலக்காடுகளை பார்வையிடுவதற்காக சுற்றுலாத்துறை சார்பில் துடுப்பு மற்றும் மோட்டார் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதை நம்பி 70–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கின்றனர்.

 இந்த நிலையில் வனத்துறையினர் சார்பில் குறைந்த கட்டணத்தில் 10 படகுகள் இயக்கப்படுகிறது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி சுற்றுலாத்துறை சார்பில் படகு இயக்கி வரும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று, சி.ஐ.டி.யு. தொழிலாளர்கள் திடீரென படகுகளை இயக்காமல் தர்ணா போராட்டம் செய்தனர்.

 இதுபற்றி தகவல் அறிந்த கிள்ளை போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வனத்துறையினர் படகு இயக்குவது தொடர்பாக அங்கு வைத்துள்ள அறிவிப்பு பலகையை அகற்ற வேண்டும், சுற்றுலாத்துறை எந்த கட்டணத்தில் படகு இயக்குகிறதோ அதே கட்டணத்தில் அவர்களும் இயக்கிட வேண்டும், வெளியூர்களை சேர்ந்தவர்களை வைத்து வனத்துறையினர் படகுகளை இயக்க கூடாது என்று தொழிலாளர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையேற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு அனைவரும் தகுந்த பாதுகாப்பை அளித்திட வேண்டம், படகு ஓட்டும் நேரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதையும் வைத்து இருக்க கூடாது, இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.


Next Story