ஒட்டன்சத்திரம் அருகே விபத்தில் 8 பேர் சாவு: பலியானவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள்


ஒட்டன்சத்திரம் அருகே விபத்தில் 8 பேர் சாவு: பலியானவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள்
x
தினத்தந்தி 2 Jan 2018 3:45 AM IST (Updated: 2 Jan 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசு பஸ் மீது, தனியார் பஸ் மோதிய விபத்தில் 8 பேர் பலியாகினர். இறந்தவர்களில் சிலர் குறித்து உருக்கமான தகவல்கள் தெரியவந்துள்ளது.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் இருந்து அரசு பஸ் ஒன்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை டிரைவர் சந்திரன் என்பவர் ஓட்டினார். ஒட்டன்சத்திரம் அருகே பலக்கனூத்து–மூலச்சத்திரம் இடையே பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே திண்டுக்கல் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் திண்டுக்கல் பண்ணுவார்பட்டியை சேர்ந்த சோலையன் மனைவி போதுமணி (வயது 25), ஏ.கே.எம்.வி. நகர் பகுதியை சேர்ந்த வெர்ஜின் மகன் ஜோடனியல் (12), சாலைப்புதூர் அத்திக்கோம்பை பகுதியை சேர்ந்த ஆனந்தன் மனைவி நாகஜோதி (30), இவர்களுடைய 2 வயது குழந்தை வசீகரன், நத்தம் அருகே உள்ள நடுவூரை சேர்ந்த பாண்டியராஜன் மகன் சபரி ஆர்விக் (6), திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த விஸ்வநாதன் (63), ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த பழனிசாமி மகன் சத்தியமூர்த்தி (42), கோவை மாவட்டம் சிங்காநல்லூரை சேர்ந்த ராஜா மனைவி புவனேஷ்வரி (30) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்தில், திண்டுக்கல்லை சேர்ந்த மகாலட்சுமி (33), கோகிலா (14), முருகவள்ளி (46), முத்தழகு (36), வசந்தா (37), இடையக்கோட்டையை சேர்ந்த முனியப்பன் மகன் கவுதம் (18), எட்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த சக்திவேல் மனைவி நாகலட்சுமி (25), ராஜா, அபர்ணா (7), ஸ்ரீரங்கன் ஆகியோர் உள்பட 19 பேர் படுகாயமடைந்தனர்.

இவர்களில் நாகலட்சுமி, அபர்ணா, ஸ்ரீரங்கன் ஆகிய 3 பேரும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 13 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், 3 பேர் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் தாயும், குழந்தையும் பலியான சம்பவம் நடந்துள்ளது. அதாவது, அத்திக்கோம்பையை சேர்ந்த ஆனந்தன் மனைவி நாகஜோதி என்பவர், தனது 2 வயது குழந்தை வசீகரனுடன் கோவைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் விபத்தில் சிக்கி குழந்தையுடன் பலியாகியுள்ளார். இதேபோல கோவை மாவட்டம் சிங்காநல்லூரை சேர்ந்த ராஜா, தனது மனைவி புவனேஷ்வரி மற்றும் மகனுடன் திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார்.

என்ஜினீயரிங் பட்டதாரிகளான இருவரும் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தனர். இந்தநிலையில் விபத்தில் புவனேஷ்வரி பரிதாபமாக இறந்தார். ராஜாவும் அவருடைய மகனும் காயமடைந்தனர். இதில் ராஜாவின் தந்தை சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் இறந்த விஸ்வநாதன் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆவார். அவர் கோவைக்கு அடிக்கடி கூலி வேலைக்கு செல்வது வழக்கம். மேலும் அவர் மற்ற தொழிலாளர்களையும் வேலைக்கு அழைத்து செல்வார். அதன்படி நேற்று முன்தினம் வேலைக்காக, கோவை செல்வதற்கு ஆறுமுகம் என்பவரையும் உடன் அழைத்து சென்றுள்ளார். இருவரும் ஒரே இருக்கையில் அருகருகே அமர்ந்து தான் பயணம் செய்துள்ளனர். விபத்தில் சம்பவ இடத்திலேயே விஸ்வநாதன் பலியாகிவிட்டார். ஆனால் ஆறுமுகம் காயமின்றி உயிர் தப்பினார்.

உறவினர்களான போதுமணி, சபரி ஆர்விக், இவனுடைய அக்காள் அபர்ணா, கோகிலா, இவருடைய மகள் முத்தழகு ஆகியோரும் பயணம் செய்தனர். இதில் விபத்தில் சிக்கி போதுமணி, சபரி ஆர்விக் ஆகியோர் இறந்தனர். மற்ற அனைவரும் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய தனியார் பஸ் டிரைவர் மற்றும் உதவியாளரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே தனியார் பஸ் டிரைவர் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் என்றும், அவர் மதுபோதையில் பஸ்சை ஓட்டியதால் தான் விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் கோவையில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவரை பிடிக்க ஒட்டன்சத்திரம் போலீசார் கோவை விரைந்துள்ளனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story