மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை


மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 Jan 2018 4:00 AM IST (Updated: 2 Jan 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி சிறுகனூரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியின் விடுதி அறையில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சமயபுரம்,

திருச்சியை அடுத்த சிறுகனூரில் எம்.ஏ.எம். என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு சென்னை வேளச்சேரியை சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் காமராஜ் (வயது 21) 3–ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதி அறையில் தங்கி படித்து வந்த காமராஜ், நேற்று மாலை 4.30 மணி அளவில் தான் தங்கி இருந்த அறைக்கதவை உள்பக்கமாக பூட்டினார். பின்னர் அவரது அறைக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த சக மாணவர்கள் அறைக்கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதோ என்று நினைத்த மாணவர்கள், உடனடியாக அந்த அறையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை நிலைகுலைய செய்தது. அங்கு சக மாணவரான காமராஜ் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டு இருந்தார்.

இதையடுத்து சக மாணவர்கள் அந்த அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு காமராஜின் உயிரற்ற உடலை பார்த்து மாணவர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து சிறுகனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ரேணுகா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் மாணவர் காமராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

காமராஜ் தூக்குப்போட்ட அறையில் இருந்த மேஜையில் அவர் எழுதிய கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தனது பெற்றோருக்கு காமராஜ் உருக்கமாக எழுதி உள்ளார். அதில் “அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் எது செய்தாலும் உங்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் இந்த உலகத்தில் வாழ்வது வீண் என நினைத்து இந்த முடிவை எடுத்துள்ளேன். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்“ என அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கல்லூரி விடுதி அறையில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மற்ற மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story