புத்தாண்டு பிறப்பையொட்டி திருச்சி கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்


புத்தாண்டு பிறப்பையொட்டி திருச்சி கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2018 11:00 PM GMT (Updated: 1 Jan 2018 9:30 PM GMT)

புத்தாண்டு பிறப்பை யொட்டி திருச்சி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி,.

2018-ம் ஆண்டு பிறப்பையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. நேற்று காலையிலும் திருச்சி நகரில் உள்ள பல கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதே போல் இந்து கோவில்களிலும் நேற்று காலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மலைக்கோட்டை கோவில்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் உள்ள மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையார் சன்னதிகள் நேற்று காலை வழக்கம்போல் 5.30 மணிக்கு திறக்கப்பட்டன. நடை திறக்கப்படுவதற்கு முன்பே மாணிக்க விநாயகர் சன்னதியில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். மாணிக்க விநாயகர் சன்னதியில் தரிசனம் முடித்த பக்தர்கள் உச்சிப்பிள்ளையாரையும் தரிசித்தனர்.இதனால் மலை உச்சி படிக்கட்டுகளிலும் பக்தர்கள் வரிசையில் நின்றனர். மதியம் 12 மணி வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

வரிசையில் நின்று தரிசனம்

கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள அய்யப்பன் கோவிலில் நேற்று அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வரிசையில் நின்றனர். பக்தர்களது வரிசை வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா வரை நீடித்தது. சாமி தரிசனம் முடித்த பின்னர் பக்தர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

இதே போல் உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில், வெக்காளியம்மன் கோவில், ஜங்ஷன் வழிவிடுவேல் முருகன் கோவில், கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில், தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில்களிலும் புத்தாண்டையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வெக்காளியம்மன் கோவிலில் பெண் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். 

Next Story