இயற்கை அங்காடி உரிமையாளரை தாக்கி ரூ.10 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்


இயற்கை அங்காடி உரிமையாளரை தாக்கி ரூ.10 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்
x
தினத்தந்தி 2 Jan 2018 4:30 AM IST (Updated: 2 Jan 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை அருகே இயற்கை அங்காடி உரிமையாளரை தாக்கி மர்ம நபர் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றார்.போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை போலீஸ் நிலையம் அருகேயுள்ள உடையார்பாளையம் சாலையில் இயற்கை அங்காடி வைத்து நடத்தி வருபவர் தமிழரசன் (வயது 55). இவர் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தனக்கு முடி சீக்கிரமாக நரைத்து விட்டதாகவும், அதனை போக்க இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மருந்து வேண்டும் என கூறினார். பின்னர் அவர் கடைக்குள் வந்து அங்கிருந்த பொருட்களை பார்வையிட்டார்.

அப்போது மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த தமிழரசனை தாக்கி தலையை பிடித்து கீழே அமுக்கி வைத்து கொண்டு கல்லாவை திறந்து அதிலிருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்தார். இதனால் நிலைகுலைந்து போன தமிழரசன் திருடன்... திருடன்... என அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் தப்பியோடி விட்டார்.

இதனை தொடர்ந்து செந்துறை கடைவீதி வியாபாரிகளும், பொதுமக்களும் செந்துறை போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அவர்கள் சி.சி.டி.வி. கேமராவை பார்வையிட்டு தமிழரசன் கடையில் பணம் திருடிய மர்ம நபரை பிடிக்க வேண்டும் என கூறினர். ஆனால் போலீசார் சி.சி.டி.வி. கேமரா பழுதடைந்து விட்டது என கூறி அவர்களை அனுப்ப முயன்றனர்.

இதனை கண்டித்து வியாபாரிகள், பொதுமக்கள் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, செந்துறையில் கடந்த சில மாதங்களாக கடைகள்-வீடுகளில் நகை, பணம் மற்றும் பொருட்கள் உள்ளிட்டவை திருட்டு போவது வாடிக்கையாக உள்ளது. இதில் தொடர்புடைய நபர்களை பிடிக்கவில்லை. இதனால் தனியாக கடையில் இருக்கவே அச்சமாக இருக்கிறது. எனவே திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை பிடித்து திருட்டு போன பொருட்களை மீட்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். அப்போது செந்துறை போலீசார்,அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இதில், குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே தமிழரசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story