கடந்த ஆண்டு 40 பேர் குண்டர் சட்டத்தில் கைது போலீஸ் சூப்பிரண்டு பேட்டி


கடந்த ஆண்டு 40 பேர் குண்டர் சட்டத்தில் கைது போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
x
தினத்தந்தி 1 Jan 2018 10:15 PM GMT (Updated: 2018-01-02T03:00:30+05:30)

நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 40 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று, போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர்தேஸ்முக் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு குற்றங்கள் குறைந்துள்ளது. 2016-ம் ஆண்டை விட கடந்த ஆண்டு திருட்டு, கொள்ளை வழக்குகள் 85 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டு, திருட்டுப்போன பொருட்கள் 71 சதவீதம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காவிரி மகா புஷ்கரம் விழா மயிலாடுதுறை காவிரிக்கரையில் 12 நாட்கள் நடைபெற்றது. இதில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது எந்த அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் போலீசார் செயல்பட்டனர். விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டிய 16 ஆயிரத்து 198 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு, அதில் 3 ஆயிரத்து 110 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

குண்டர் சட்டம்

நாகை மாவட்டத்தில் மது விலக்கு குற்றங்களுக்காக 7 ஆயிரத்து 272 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மது கடத்தலில் ஈடுபட்ட 712 மோட்டார் சைக்கிள்கள், 7 ஆட்டோக்கள், 41 கார்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 40 பேர் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் 180 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. போலீஸ் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாகையில் மினி மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள், போலீசார், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆகியோர் இருந்தனர். 

Next Story