ஒகி புயலில் மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் ஆறுதல்
‘ஒகி‘ புயலில் மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு பிரேமலதா நேரில் ஆறுதல் கூறினார்.
குளச்சல்,
குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமானார்கள். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்னும் கரை திரும்பவில்லை. இதனால் மீனவ கிராமங்களில் சோகம் தீரவில்லை.
மாயமான மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நேற்று குமரி மாவட்டம் வந்தார். மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு காரில் வந்த அவர் கடற்கரை கிராமங்களுக்கு சென்றார்.
முதலில் கடியப்பட்டணம் கிராமத்தில் புயலில் மாயமான டெல்பின்ராஜ் என்பவரின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது மனைவிக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் குளச்சலில் பலியான மீனவர் ஜஸ்டின் பாபுவின் வீட்டுக்கு சென்று அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன்பின் குளச்சல் காணிக்கை மாதா ஆலய பங்குத்தந்தை எட்வினை சந்தித்து பிரேமலதா விவரங்களை கேட்டறிந்தார்.
அப்போது பங்குத்தந்தை எட்வின், பிரேமலதாவிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது, மீனவர்களை தேட விமான தளம் அமைப்பது உள்பட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தது.
அப்போது பிரேமலதா பேசும்போது, உங்கள் கோரிக்கைகள் பற்றி விஜயகாந்திடம் தெரிவித்து அவர் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். வெளிநாடுகளில் இதுபோல் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஆளில்லாத விமானங்கள் பயன் படுத்தப்படுகிறது. நம்மிடம் அதுபோன்ற தொழில்நுட்பம் இல்லாதது ஒருகுறையாக உள்ளது என்றார்.
அதைத் தொடர்ந்து மாயமான மீனவர் ஜான் டேவிட்சன் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அதன்பின்னர் பிரேம லதா நிருபர்களிடம் கூறியதாவது:–
மீனவர்களின் துயரத்தில் பங்கெடுப்பதற்காக இங்கு வந்துள்ளேன். எங்கள் சக்திக்கு ஏற்றபடி உங்களுக்கு உதவிகள் செய்வோம். மாயமான மீனவர்களின் குழந்தைகள் படிப்பு செலவை நாங்கள் ஏற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அரசும் படிப்பு செலவுக்கு உதவி செய்ய வேண்டும்.
பலியான மீனவர் குடும்பங்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கினால் போதாது. மாயமான மீனவர்கள் குடும்பத்தினருக்கும் உடனடியாக ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும்.
நான் இங்கு வரும்போது ஒவ்வொரு தெருவிலும் கண்ணீர் அஞ்சலி பேனர்களை பார்த்தேன். இதுவே இந்த அரசின் செயல்பாடுகளுக்கு சாட்சியாக உள்ளது. இந்த ஆண்டு தமிழக மக்களுக்கு நிச்சயம் விடிவு பிறக்கும். மீனவர்களை போல விவசாயிகளுக்கும் புயலால் பாதித்த அனைவருக்கும் உரிய நிவாரணம் உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரேமலதாவுடன் குமரி மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் ஜெகநாதன், கிழக்கு மாவட்ட செயலாளர் அமலன், நாகர்கோவில் நகர செயலாளர் மணிகண்டன், மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.