‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர் சத்தியாகிரக போராட்டம்


‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர் சத்தியாகிரக போராட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2018 4:30 AM IST (Updated: 2 Jan 2018 10:53 PM IST)
t-max-icont-min-icon

ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புலியூர்குறிச்சியில் விவசாயிகள் தொடர் சத்தியாகிரக போராட்டம் தொடங்கினர்.

தக்கலை,

குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 30–ந் தேதி வீசிய ஒகி புயலில் ஏராளமான விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். புயல் தாக்கி ஒரு மாதம் ஆன நிலையில் இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்று பல்வேறு அமைப்பினரும் குற்றம் சாட்டினர்.

மேலும் புயல் பாதித்த அனைவருக்கும் சம இழப்பீடு வழங்க வேண்டும், பயிர்களுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் விவசாய அமைப்புகள் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் சத்யாகிரக போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் உள்ள பத்மநாபபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் அலுவலகம் முன்பு தொடர் சத்யாகிரக போராட்டம் தொடங்கியது.

இதற்கு மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். போராட்டத்தை விவசாய கூட்டமைப்பு சங்க நிர்வாகி புலவர் செல்லப்பா தொடங்கி வைத்தார். இதில், குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ.கள் முகமது இஸ்மாயில், புஷ்பலீலா ஆல்பன், விவசாய சங்க நிர்வாகிகள் வின்ஸ் ஆன்றோ, பத்மதாஸ், செண்பகராமன்பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து நடைபெறும் என்று போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களும் எழுப்பினர். மேலும் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்காக கஞ்சி காய்க்கும் பணியும் அங்கு நடந்தது.


Next Story