நீலகிரி மாவட்டத்தில் மரம் வெட்டுவதற்கு அனுமதி பெற புதிய இணையதளம்


நீலகிரி மாவட்டத்தில் மரம் வெட்டுவதற்கு அனுமதி பெற புதிய இணையதளம்
x
தினத்தந்தி 3 Jan 2018 3:30 AM IST (Updated: 3 Jan 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் மரம் வெட்டுவதற்கு அனுமதி பெற புதிய இணையதளத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள் மற்றும் தனியார் தோட்டங்களில் பட்டியலில் இல்லாத மரங்களை வெட்டுவதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகள் மற்றும் தோட்ட முதலாளிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலமாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இதன் மூலம்

மரம் வெட்ட அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்து சரிபார்க்க காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

அதனை குறைக்கும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் மரம் வெட்ட அனுமதி பெறுவதற்கான www.nilgiristreecuttingpermissons.org என்ற புதிய இணையதளத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து இன்னசென்ட் திவ்யா கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:–

விவசாயிகள் மற்றும் தோட்ட முதலாளிகள் தங்களது தோட்டங்களில் உள்ள மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டர் மூலம் அனுமதி பெற ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். அந்த இணையதளத்தில் நிலத்தின் வரைபடம், சர்வே எண், பட்டா, சிட்டா அடங்கல் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகளுக்கு ஆன்லைன் வழியாக அனுப்பி வைக்கப்படும்.

அவர்கள் அந்த விண்ணப்பத்தை சரிபார்த்து, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைப்பார்கள். அதன் பின்னர் அந்த விண்ணப்பங்கள் மீது மாவட்ட அளவிலான அதிகாரிகள் குழுவினர் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு, மரம் வெட்டுவதற்கான அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் அனுமதி வழங்க காலதாமதம் ஏற்படுவது குறையும். மேலும் உடனுக்குடன் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்கப்படும். தற்போது புதியதாக விண்ணப்பிபவர்களின் மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை இணையதளத்தில் சேர்க்க இ–சேவை மையத்துக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story