உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை நகல்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும்


உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை நகல்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 3 Jan 2018 4:00 AM IST (Updated: 3 Jan 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை குறித்த தகவல்கள் அடங்கிய நகல்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் பிரதிநிதிகள் வலியுறுத்தினார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் 251 கிராம ஊராட்சிகளில் 2,343 வார்டுகளும், 188 வட்டார ஊராட்சி வார்டுகளும், 18 மாவட்ட ஊராட்சி வார்டுகளும், தர்மபுரி நகராட்சியில் 33 வார்டுகளும், 10 பேரூராட்சிகளில் 159 வார்டுகளும் உள்ளன. இந்த வார்டுகளின் எண்ணிக்கையில் மாற்றம் மேற்கொள்ளாமல் 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு தயார் செய்யப்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்கள் அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொது அலுவலகங்களில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மறுவரையறை குறித்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடையே கருத்து கேட்கும் கூட்டம், தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், உதவி கலெக்டர் ராமமூர்த்தி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கடாசலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சித்ரா, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காலஅவகாசம்

இந்த கூட்டத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பேசுகையில், வார்டு மறுவரையறை தொடர்பான விவரங்கள் அடங்கிய பட்டியலின் நகலை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால்தான் வார்டு மறுவரையறை குறித்து கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து பேசி வார்டு மறுவரையறையில் பிரச்சினைகள் ஏதேனும் உள்ளதா? என்பதை கண்டறிய முடியும். எனவே வார்டு மறுவரையறை தொடர்பான நகல்களை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பின்னர் உரிய காலஅவகாசம் வழங்கி மீண்டும் கருத்துகேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். கூட்டத்தில் கலெக்டர் விவேகானந்தன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்களை பதிவு செய்து கொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், வருகிற 5-ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரை வார்டு மறுவரையறை தொடர்பான அறிவிப்பு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வார்டு மறுவரையறை குறித்த விவரங்களை தர்மபுரி மாவட்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். அரசியல் கட்சியினரின் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்து அளிக்கப்படும் மனுக்கள் தமிழ்நாடு மாநில மறுவரையறை ஆணையத்தால் நடத்தப்பட உள்ள மண்டல அளவிலான ஆலோசனைக்கூட்டத்தில் பரிசீலிக்கப்படும். தற்போது கருத்துக்கள் தெரிவிப்பவர்கள் மண்டல அளவிலான ஆலோசனைக்கூட்டத்தில் நேரில் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று கூறினார்.

வெளிநடப்பு

இந்த கூட்டத்தில் சுப்பிரமணியம், கோவிந்தசாமி (அ.தி.மு.க.), பி.கே.முருகன், சேட்டு(தி.மு.க.) கோவி.சிற்றரசு, கவுதமன்(காங்கிரஸ்) வெங்கடேஸ்வரன், சண்முகம்(பா.ம.க.) வரதராஜன், பாஸ்கர்(பா.ஜ.க), மாரிமுத்து (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. காங்கிரஸ், பா.ம.க. ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியபின் கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 

Next Story