அன்னூர் அருகே தபால் நிலையத்தில் பணம் கையாடல் வாடிக்கையாளர்கள் புகார்


அன்னூர் அருகே தபால் நிலையத்தில் பணம் கையாடல் வாடிக்கையாளர்கள் புகார்
x
தினத்தந்தி 3 Jan 2018 3:45 AM IST (Updated: 3 Jan 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

அன்னூர் அருகே பச்சாபாளையம் கிளை தபால் நிலையத்தில் பணம் கையாடல் செய்யப்பட்டதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.

அன்னூர்,

கோவையை அடுத்த அன்னூர் ஊராட்சி ஒன்றியம் பச்சாபாளையம் கிராமத்தில் கிளை தபால் நிலையம் உள்ளது. இதை பச்சாபாளையம், வடுகபாளையம், நாராணாபுரம், சாலையூர் உள்ளிட்ட 9 கிராமங்கள் பயன்படுத்தி வருகின்றனர். பச்சாபாளையம் கிளை தபால் நிலைய அதிகாரியாக வேலை செய்து வருபவர் லீலாவதி. இவர் கோவை குரும்பபாளையம் நேரு நகரில் வசித்து வருகிறார்.

பச்சாபாளையம் தபால் நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் செலுத்தும் சேமிப்பு, தொடர் வைப்பு, வைப்புத்தொகையை லீலாவதி கோவில்பாளையத்தில் உள்ள தலைமை அலு வலகத்தில் செலுத்த வேண்டும். ஆனால் அவர், வாடிக்கையாளர்களிடம் வாங்கிய தொகைக்கு பச்சாபாளையம் தபால் நிலைய முத்திரையிட்டு கொடுத்துள்ளார். ஆனால் அவர் வாடிக்கையாளர்களிடம் வாங்கி தொகையை கோவில்பாளையம் தலைமை தபால் நிலையத்தில் செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தங்களது கணக்கில் செலுத்திய தொகையை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு உரிய பதில் அளிக்காமல் லீலாவதி காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து வாடிக்கையாளர்கள் கோவில்பாளையம் தபால்நிலையத்திற்கு சென்று பார்த்தபோது அவர்களின் கணக்கில் பணம் சேர்க்கப்படாமல் இருப்பது தெரிய வந்தது.

இதனால் தங்களின் பணம் கையாடல் செய்யப்பட்டு விட்டதாக கோவை தலைமை தபால் நிலைய அதிகாரியிடம் வாடிக்கையாளர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் கோவை தலைமை தபால் நிலைய உதவி கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன், மேற்பார்வையாளர்கள் கங்காதரன், சண்முககுமார் ஆகியோர் பச்சாபாளையம் கிளை தபால் நிலையத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

இதில் கிளை தபால் நிலையத்தில் பெறப்பட்ட பணத்தை தலைமை அலுவலகத்தில் செலுத்தாமல் இருப்பது தெரிய வந்தது. அதிகாரிகள் வந்ததை அறிந்த வாடிக்கையாளர்கள் திரண்டு வந்து தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பச்சபாளையம் கிளையில் உள்ள அனைத்து கணக்குகளையும் சரி பார்த்த பிறகு தான் பணம் கையாடல் தொடர்பாக முழு விவரமும் தெரிய வரும் என்று அதிகாரிகள் கூறினர்.

இதைத்தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் சேமிப்பு கணக்கு புத்தகங்களை பெற்று, அதில் எவ்வளவு தொகை இருப்பில் உள்ளதாக பதிவாகி இருக்கிறது என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். தபால் நிலையத்தில் சேமிப்பதற்காக செலுத்திய பணம் தங்களின் கணக்கில் வரவு வைக்கப்படாமல் இருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story