தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டம்


தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2018 4:00 AM IST (Updated: 3 Jan 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கான மசோதாவும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆணையம் மக்கள் நலனுக்கு எதிரானது என்றும், மருத்துவ, சுகாதார பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் கூறி வருகிறது.

அத்துடன் மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்திலும் நேற்று டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் டாக்டர்கள் நேற்று காலை 9 மணி முதல் 10 மணி வரை புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை புறக்கணித்ததுடன், கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க கோவை மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெய சிங் முன்னிலை வகித்தார். இதில் அங்கு பணியாற்றும் ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கை குறித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி பணியில் ஈடுபட்டனர்.

இதுபோன்று மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை புறநோயாளிகள் மற்றும் தேர்வு செய்யப்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர அறுவை சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளித்தனர். கோவை மாவட்டத்தில் உள்ள 300 தனியார் ஆஸ்பத்திரிகளை சேர்ந்த டாக்டர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டன.

இது குறித்து இந்திய மருத்துவ சங்க கோவை மாவட்ட தலைவர் எஸ்.கருணா நிருபர்களிடம் கூறியதாவது:–

தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட்டமைப்பு மற்றும் பேராசிரியர்கள் நியமனங்களை சரிவர செய்யாத கல்லூரிகளை இந்திய மருத்துவ கவுன்சில் ஆண்டுதோறும் ஆய்வு செய்து தகுதி இல்லாத மருத்துவ கல்லூரிகளை தடை செய்து வந்தது. ஆனால் புதிதாக மத்திய அரசு கொண்டு வர உள்ள தேசிய மருத்துவ ஆணையத்தில், ஒருமுறை அங்கீகாரம் பெற்றால் போதும். பிறகு தனியார் கல்லூரிகள் தங்களின் தேவைக்கு ஏற்ப மாணவர்களின் சேர்க்கையை உயர்த்திக்கொள்ளலாம்.

மேலும் எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் மட்டுமே அலோபதி மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் புதிய மசோதாவில் சித்தா, ஆயுர்வேதம் படித்தவர்கள், 6 மாதம் பயிற்சி பெற்ற பின்னர் அலோபதி மருத்துவராக செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆணையம் கொண்டுவரப்பட்டால் கண்டிப்பாக நமது நாடு மருத்துவத்துறையில் முன்னேற்றம் பெறாது. எனவே அதை உடனடியாக நிறுத்தி வைத்துவிட்டு, மருத்துவ துறையை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story