மத்திய அரசின் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: மதுரை டாக்டர்கள் போராட்டம்


மத்திய அரசின் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: மதுரை டாக்டர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2018 4:00 AM IST (Updated: 3 Jan 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் மத்திய அரசின் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை,

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் புதிய மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் டாக்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.

இந்திய மருத்துவ சங்கத்தின் மதுரை கிளை சார்பில் நேற்று ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியின் நுழைவு வாயிலில் டாக்டர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கத்தின் மதுரை கிளை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் அமானுல்லா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்திய மருத்துவ கவுன்சிலானது இந்தியாவின் மருத்துவ துறையை கண்காணித்து நவீன மருத்துவர்களை உருவாக்கி வந்துள்ளது. மருத்துவ வளர்ச்சிக்காக பாடுபட்ட இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு தன்னிச்சையாக மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுக்க முன் வந்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

கடும் எதிர்ப்பையும் மீறி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மசோதாவுக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

இந்திய மருத்துவ கவுன்சில் விதி 156–ன் படி எம்.பி.பி.எஸ். படித்தால் மட்டும் தான் நவீன மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும். மத்திய அரசின் புதிய மசோதாவில் சித்தா, ஆயுர்வேதம் பயின்றவர்களும் தனி கவுன்சிலில் பதிவு செய்து விட்டு எந்தவித தேர்வுமின்றி அலோபதி மருத்துவராகலாம்.

வெளிநாட்டில் பயின்ற மருத்துவர்கள் இந்தியாவில் பணி புரிய தேர்வு எழுத வேண்டும். ஆனால் இந்த மசோதாவில் எவ்வித தேர்வுமின்றி வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் மருத்துவராக பணியாற்றலாம். இந்திய இறையாண்மைக்கும், ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிராக உள்ள இந்த மசோதாவை இந்திய மருத்துவ சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு மருத்துவ சங்கத்தின் செயலாளர் டாக்டர் ரமேஷ், துணைத்தலைவர் அழகு வெங்கடேசன் உள்ளிட்ட 200–க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story