தனது பங்கு ஆடுகளை கொடுக்கவில்லை என்று அண்ணனை கொன்ற கார் டிரைவர்
தனது பங்கு ஆடுகளை கொடுக்கவில்லை என்று அண்ணனை கொன்ற கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்திரமேரூர்,
உத்திரமேரூர் ஆர்.என்.கண்டிகையை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன்கள் லூர்துசாமி (வயது 44), புஷ்பராஜ் (38). சகோதரர்களான இவர்களுக்கு இடையே பாகப்பிரிவினையில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கார் டிரைவரான புஷ்பராஜ் கேரளாவில் வசித்து வந்தார். இந்தநிலையில் தந்தையிடம் இருந்த ஆடுகளை மூத்த மகனான லூர்துசாமி பணம் கொடுத்து வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் ஜோசப் இறந்து விடுகிறார்.
கடந்த மாதம் 12–ந்தேதி சொந்த ஊருக்கு வந்த புஷ்பராஜ், லூர்துசாமியிடம் அப்பாவிடம் இருந்து வாங்கிய ஆடுகளில் பாதியை தன்னிடம் தரும்படி கேட்டார். அதற்கு லூர்துசாமி, நான் அப்பாவிடம் பணம் கொடுத்துத்தான் ஆடுகளை வாங்கினேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த புஷ்பராஜ் கத்தியால் லூர்துசாமியின் கழுத்தை வெட்டினார். மேலும் இரும்பு கம்பியால் அவரது தாடையில் அடித்ததாக தெரிகிறது. இதில் லூர்துசாமி பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த நிலையில் புஷ்பராஜ் தனது மனைவியுடன் தப்பிச்சென்று விட்டார்.
சிகிச்சை பெற்று வந்த லூர்துசாமி கடந்த மாதம் 23–ந்தேதி ஆர்.என்.கண்டிகைக்கு திரும்பினார். மீண்டும் கடந்த 31–ந்தேதி தலையில் வலி ஏற்படவே சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி லூர்துசாமி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். பெருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கொலை வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான புஷ்பராஜை தேடி வருகிறார்.