கூடுதல் பஸ்கள் இயக்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்


கூடுதல் பஸ்கள் இயக்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 3 Jan 2018 4:00 AM IST (Updated: 3 Jan 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பஸ்கள் இயக்காததை கண்டித்து உத்திரமேரூரில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம்,

உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை முதல் சென்னை, செங்கல்பட்டு மார்க்கத்தில் செல்வதற்காக பொதுமக்கள் ஏராளமானோர் காத்திருந்தனர். போளூர், வந்தவாசி பகுதியில் இருந்து சென்னை, செங்கல்பட்டு செல்வதற்காக வந்த பஸ்களில் அதிக அளவு கூட்டம் காணப்பட்டது. இதனால் பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் அந்த பஸ்களில் ஏற முடியாமல் அவதிப்பட்டனர்.

விடுமுறைக்கு பின்பு வரும் வேலைநாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் பஸ் இயக்கப்படுவதில்லை. இதற்காக பலமுறை கோரிக்கை விடுத்தும் போக்குவரத்து நிர்வாகம் பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வது இல்லை.

நேற்றும் அதே நிலை நீடித்ததால் கோபம் அடைந்த பொதுமக்கள் உத்திரமேரூர் பஸ்நிலையம் முன்பு உத்திரமேரூர்–சென்னை நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். போக்குவரத்து மேலாளர் ராஜசேகரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர்கள் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து பணிமனை மேலாளர் ராஜசேகரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

நேற்று காலை உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டது. காலை 7.10 மணிக்கு வரும் பஸ் சற்று தாமதமாக வந்ததால் கூட்டம் அதிகமாகி விட்டது. அதற்குள் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுவிட்டனர். மேலும் பணிமனையிலுள்ள பஸ்களை வைத்து கூட்ட நெறிசலை சரிசெய்து வருகிறோம். கூடுதலாக பஸ்கள் பணிமனைக்கு கிடைத்தவுடன் பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story