காஞ்சீபுரம், செங்கல்பட்டில் டாக்டர்கள் போராட்டம்


காஞ்சீபுரம், செங்கல்பட்டில் டாக்டர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2018 4:30 AM IST (Updated: 3 Jan 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம், செங்கல்பட்டில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம்,

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு தனியார் மற்றும் அரசு டாக்டர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய மருத்துவ சங்கம் காஞ்சீபுரம் கிளை சார்பில் நடந்த போராட்டத்தில் டாக்டர்கள் விக்டோரியா, சங்கரன், ஜீவரத்தினம், சரவணன் உள்ளிட்ட தனியார் டாக்டர்கள் மற்றும் அரசு டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் மோகன்குமார் கூறியதாவது:–

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க கூடாது. தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டால் 6 மாத பயிற்சி மேற்கொள்வதன் மூலம், எம்.பி.பி.எஸ். படிக்காத மருத்துவர் அலோபதி சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும். இது மக்களின் மருத்துவ சிகிச்சை முறைகளில் பேராபத்தை விளைவிக்கும். இதன் மூலம் போலி மருத்துவர்களை உருவாக்க அரசே அங்கீகாரம் அளிப்பது போன்று அமைந்து விடும்.

இதேபோல முறையாக எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்ற டாக்டர்கள் மீண்டும் ஒரு முறை தேர்வு எழுதி வெற்றி பெற்ற பின்னரே தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடும் டாக்டர்களை பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர்கள் போராட்டத்தால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிக்குள்ளானார்கள்.


Next Story