பஜகொள்ளியில் தார் சாலைகள் அமைத்து தரக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


பஜகொள்ளியில் தார் சாலைகள் அமைத்து தரக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2018 2:30 AM IST (Updated: 3 Jan 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

பஜகொள்ளி கிராமத்தில், தார் சாலைகள் அமைத்து தரக்கோரி நேற்று கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடகு,

பஜகொள்ளி கிராமத்தில், தார் சாலைகள் அமைத்து தரக்கோரி நேற்று கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை வசதிகள்...

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா சித்தாப்புரா அருகே உள்ளது பஜகொள்ளி கிராமம். இந்த கிராமம் மால்தாரே கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் ஆகும். இங்கு சுமார் 60–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இக்கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக சாலை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மண் சாலைகள்தான் அங்கு உள்ளன. அந்த சாலை வழியாக மெயின் ரோட்டுக்கு வருவதற்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

கிராம மக்கள் பீதி

தார் சாலைகள் அமைக்கப்படாததால், யாரேனும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டால் அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல கிராம மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சிலர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதி புலி மற்றும் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கிராமத்தைச் சேர்ந்த முகமது என்ற விவசாயிக்கு சொந்தமான 5 பசுமாடுகளை புலி வேட்டையாடி கொன்றுள்ளது. மேலும் காட்டுயானைகளின் அட்டகாசத்தால் ஏராளமான விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தாலும் சரியான சாலை வசதி இல்லாததால் யாரும் கிராமத்திற்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டம்

எனவே தங்களுடைய கிராமத்தில் உடனடியாக சாலை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்றும், அனைத்து சாலைகளையும் தார் சாலைகளாக அமைத்துத் தர வேண்டும் என்றும் அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கிராமத்திலேயே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தங்களுடைய கோரிக்கை மனுவை அவர்கள் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் மூலம் அனுப்பினர்.


Next Story