சுற்றித்திரிந்து மீட்கப்பட்ட இளம்பெண், மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் தாயாரிடம் ஒப்படைப்பு


சுற்றித்திரிந்து மீட்கப்பட்ட இளம்பெண், மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் தாயாரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 3 Jan 2018 4:15 AM IST (Updated: 3 Jan 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் சுற்றித்திரிந்து மீட்கப்பட்ட இளம்பெண் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் என்பது அடையாளம் தெரிந்ததை தொடர்ந்து அவர், தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு புரியாத மொழியில் பேசிக் கொண்டு, அழுக்கான துணியோடு சுற்றித்திரிந்த இளம் பெண்ணை திருப்பத்தூர் போலீசார் மீட்டு, திருப்பத்தூர் ரெயில்வே ஸ்டேசன் ரோட்டில் உள்ள உதவும் உள்ளங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து அந்த பெண்ணிற்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. இதனால் அந்த பெண்ணிற்கு ஓரளவு நினைவு திரும்பியது. பின்னர் காப்பக நிர்வாகிகள் விசாரித்ததில், அந்த பெண், மராட்டிய மாநிலம் அகோலே தாலுகா பால்டன் கிராமத்தை சேர்ந்த பாண்டுரங் கபாலே - சாங்குணா தம்பதியரின் 2-வது மகள் காஞ்சன் (வயது 17) என தெரியவந்தது. மேலும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த காஞ்சன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமானதும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து காஞ்சன் கூறிய முகவரியில் உள்ள அகோலே போலீசாருக்கு காப்பகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள போலீசாரின் முயற்சியில் காஞ்சனின் முகவரி கண்டறியப்பட்டு, அவருடைய தாயார் சாங்குணா காப்பகத்திற்கு நேரில் வரவழைக்கப்பட்டார். மகளை கண்டதும் தாயார் சாங்குணா கட்டியணைத்து முத்தமிட்டார்.

பின்னர் அவர், ஆனந்த கண்ணீர் மல்க கூறுகையில், மகள் மாயமானது குறித்து மும்பை, தானே உள்ளிட்ட பல பகுதிகளில் தேடி பார்த்தோம். எந்த தகவலும் கிடைக்கவில்லை, ஒரு கட்டத்தில் மகள் கிடைப்பால் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம். இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து தொலைபேசி மூலம் வந்த செய்தி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. எங்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை’ என்றார்.

பின்னர் திருப்பத்தூர் டவுன் போலீசார் அறிவுரைப்படி தாயாருடன் காஞ்சன் அனுப்பி வைக்கப்பட்டார். 

Next Story