தேசிய மருத்துவ ஆணையத்தை ரத்து செய்யக்கோரி தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தம்
தேசிய மருத்துவ ஆணையத்தை ரத்து செய்யக்கோரி, திண்டுக்கல்லில் தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். மேலும் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
இந்தியா முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு டாக்டர்களை உறுப்பினர்களாக கொண்டு, இந்திய மருத்துவ கழகம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு, இந்த மருத்துவக்கழகத்தை கலைத்து விட்டு, தேசிய மருத்துவ ஆணையத்தை தொடங்க முடிவு செய்துள்ளது. இதுதவிர, டாக்டர்கள் அல்லாத பிற துறையை சேர்ந்தவர்களை தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினர்களாக்குவது உள்பட பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
இதுகுறித்த மசோதாவை ரத்து செய்யக்கோரி, இந்திய மருத்துவ கழக நிர்வாகிகள் நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளை ஒருநாள் முழுவதும் அடைத்து தங்களது எதிர்ப்பை காட்ட முடிவு செய்தனர். அதன்படி நாடு முழுவதும் நேற்று தனியார் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, சுமார் 500–க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அனைத்து மருத்துவமனைகளையும் நேற்று அடைத்து, டாக்டர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் இந்திய மருத்துவ கழக டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர். அதன்படி இந்த 2 சங்கத்தினரும், திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு, இந்திய மருத்துவ கழகத்தின் திண்டுக்கல் கிளை செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். அரசு டாக்டர்கள் சங்க மாநில துணை தலைவர் சீனிவாசன், மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, பொருளாளர் திருலோசந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட டாக்டர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது. இதையொட்டி மாவட்ட மருத்துவத்துறை நிர்வாகம், வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவில் பணிகள் பாதிக்காதவாறு மாற்று ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
அதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகள் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடைக்கப்பட்டன. இதையொட்டி வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதே சமயத்தில் அவசர சிகிச்சைகள் மட்டும் அளிக்கப்பட்டன. மாலை 6 மணிக்கு மேல் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் வழக்கம் போல் இயங்கின.