இந்திய மருத்துவ கூட்டமைப்பை கலைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு சிவமொக்காவில் 668 தனியார் மருத்துவமனைகள் வேலை நிறுத்தம்


இந்திய மருத்துவ கூட்டமைப்பை கலைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு சிவமொக்காவில் 668 தனியார் மருத்துவமனைகள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 3 Jan 2018 3:00 AM IST (Updated: 3 Jan 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

இந்திய மருத்துவ கூட்டமைப்பை கலைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவமொக்காவில் நேற்று 668 தனியார் மருத்துவமனைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.

சிவமொக்கா,

இந்திய மருத்துவ கூட்டமைப்பை கலைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவமொக்காவில் நேற்று 668 தனியார் மருத்துவமனைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசு திட்டம்

மத்திய அரசு இந்திய மருத்துவ கூட்டமைப்பை(ஐ.எம்.ஏ.) கலைத்துவிட்டு அதற்கு பதிலாக தேசிய மருத்துவ கமி‌ஷன்(என்.எம்.சி.) எனும் அமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் மாலையில் சிவமொக்கா டவுனில் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், இந்திய மருத்துவ கூட்டமைப்பை கலைக்கும் முடிவை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர். மேலும் நாளை(அதாவது நேற்று) மாவட்டம் முழுவதும் தனியார் மருத்துவமனைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என்றும் அவர்கள் கூறினர். பின்னர் அவர்கள் தங்களுடைய கோரிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் நேற்று சிவமொக்கா மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் அறிவித்தபடி, தனியார் மருத்துவமனைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. சிவமொக்கா டவுனில், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் டாக்டர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.

போராட்டம் இந்திய மருத்துவ கூட்டமைப்பின் சிவமொக்கா மாவட்ட தலைவர் டாக்டர் புருஷோத்தம் தலைமையில் நடந்தது. போராட்டத்திற்கு பிறகு டாக்டர் புருஷோத்தம் நிருபர்களிடம் கூறியதாவது:–

668 தனியார் மருத்துவமனைகள்

இந்திய மருத்துவ கூட்டமைப்பை மத்திய அரசு கலைக்க முடிவு செய்துள்ளது. அவர்களின் அந்த முடிவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எக்காரணம் கொண்டும் இந்திய மருத்துவ கூட்டமைப்பை கலைக்கக்கூடாது. தற்போது இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள 668 தனியார் மருத்துவமனைகள் ஈடுபட்டுள்ளன.

அந்த மருத்துவமனைகளில் ஏற்கனவே உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் தனியார் மருத்துவமனை டாக்டர்களும், ஊழியர்களும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எங்களது கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தங்களுடைய முடிவை கைவிட வேண்டும். இல்லையேல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நோயாளிகள் கூட்டம் அலைமோதியது

தனியார் மருத்துவமனைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் நோயாளிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் நீண்ட நேரம் இருந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.


Next Story