மத்திய அரசின் புதிய மசோதாவை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம்


மத்திய அரசின் புதிய மசோதாவை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2018 4:00 AM IST (Updated: 3 Jan 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் புதிய மசோதாவை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

ஈரோடு,

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க முடிவு செய்து இருப்பதற்கு நாடு முழுவதும் டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் ஆஸ்பத்திரிகளில் அவசர சிகிச்சை, உள்நோயாளிகள் பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவு மட்டும் இயங்கியது. பிற டாக்டர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. அனைத்து ஆஸ்பத்திரிகளின் முன்பும் வேலை நிறுத்த கோரிக்கை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்காக சிகிச்சை பெற வந்த பல நோயாளிகள் மாலை நேரத்தில் வரும்படி கூறி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் ஏராளமானவர்கள் பாதிப்படைந்தனர்.

வேலை நிறுத்தத்தையொட்டி டாக்டர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஈரோடு இந்திய மருத்துவ சங்க கிளை கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்க தேசிய இளம் மருத்துவர்கள் பிரிவு தலைவர் டாக்டர் கே.எம்.அபுல்ஹசன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் எஸ்.எஸ்.சுகுமார், இ.தங்கவேலு, இந்திய மருத்துவ சங்க ஈரோடு கிளை தலைவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் பேசினார்கள்.

கூட்டத்தில் டாக்டர்கள் ஏ.எஸ்.செந்தில்வேலு, கே.சுதாகர், ஏ.ராஜசேகர், சுசீந்தர், சக்கரவர்த்தி, டி.பிரேம்ராஜ் பிரபு உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் டாக்டர்கள் அனைவரும் இந்திய மருத்துவ சங்க கட்டிடத்துக்கு முன் பகுதியில் கூடி மத்திய அரசின் புதிய தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

கோபியில் 45 தனியார் மருத்துவமனைகளில் உள்ள 150 டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், அவசர சிகிச்சை, பிரசவம் ஆகியவற்றிற்கு மட்டும் சிகிச்சை அளித்தனர். வெளிபுற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால், தனியார் மருத்துவமனைகள் நோயாளிகள் வராமல் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் கோபி அபி எஸ்.கே.மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகள் முன்பு கோரிக்கைகள் அடங்கிய பேனர்களை நுழைவு வாயில் முன்பு வைத்திருந்தனர்.

இதேபோல் பவானியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் பவானி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த 60 டாக்டர்கள் ஆஸ்பத்திரியில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பவானி அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 10 டாக்டர்கள் பணிபுரிகிறார்கள். இதில் 5 பேர் பணிநிமித்தம் காரணமாக வேறு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள். மீதமுள்ள 5 பேர் நேற்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஆஸ்பத்திரியில் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

சத்தியமங்கலம் தாலுகாவில் 31 ஆண் டாக்டர்களும், 20 பெண் டாக்டர்களும் உள்ளார்கள். இவர்கள் ரத்த வங்கி கட்டிடத்தில் ஒன்று கூடி நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் சத்தி கிளை தலைவர் டாக்டர் சின்னசாமி தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் தியாகு முன்னிலை வகித்தார். போராட்டத்தில் துணைத்தலைவர் கார்த்திகேயன், டாக்டர்கள் கே.ஜி.ரங்கநாதன், பி.தங்கேவலு, நரசிம்மன், வேணுகோபால், விஸ்வநாதன், கிருஷ்ணமூர்த்தி விஜியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story