உடுமலை ஊராட்சிகளில் ஒன்றிய வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதில் குளறுபடி


உடுமலை ஊராட்சிகளில் ஒன்றிய வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதில் குளறுபடி
x
தினத்தந்தி 3 Jan 2018 3:45 AM IST (Updated: 3 Jan 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை ஊராட்சிகளில் ஒன்றிய வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதில் குளறுபடி உள்ளதாகவும், இதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை,

தமிழ்நாடு முழுவதும் வார்டு மறுவரையறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர். அதன்படி உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் போடிப்பட்டி, கணக்கம்பாளையம், பெரியகோட்டை ஆகியவை பெரிய ஊராட்சிகள் ஆகும். இதில் போடிப்பட்டி ஊராட்சியில் உள்ள சில வார்டுகளை பிரித்து வடபூதனம் ஊராட்சியில் சேர்த்து விட்டு, கணக்கம்பாளையம் ஊராட்சியின் மத்திய பகுதியில் உள்ள வார்டுகளை போடிப்பட்டி ஊராட்சியுடன் இணைத்து ஒன்றிய வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று பல ஊராட்சி பகுதிகளில் ஒன்றிய வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளதில் குளறுபடிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உடுமலை ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ் தலைமையில் தி.மு.க.வினர் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராம ஊராட்சிகள்) கிருஷ்ணமூர்த்தியிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊராட்சி பகுதியில் உள்ள வார்டுகளை மற்றொரு ஊராட்சியில் சேர்க்கும் போது வார்டு எல்லைகள் அரசு விதிமுறைகளின்படி பிரிக்கப்படவில்லை. பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கருத்துகளை கேட்காமல் அதிகாரிகள் அவசர கதியில் வரைவு பட்டியல் வெளியிட்டுள்ளனர். வரைவு பட்டியல் மீது கருத்து தெரிவிக்க போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை. ஒரு ஊராட்சிக்கும், மற்றொரு ஊராட்சிக்கும் சம்பந்தம் இல்லாமல் வார்டுகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஒன்றிய கவுன்சில் வார்டு எண் 18-ல் குரல்குட்டை ஊராட்சியோடு அடுத்துள்ள ஆலாம்பாளையம் ஊராட்சியை இணைக்காமல் அதற்கு தொடர்பு இல்லாத குருவப்பநாயக்கனூர் ஊராட்சியை இணைத்துள்ளனர். ஒன்றிய கவுன்சில் வார்டு எண்.9-ல் ராகல்பாவி ஊராட்சி அருகில் உள்ள ஊராட்சி வார்டுகளை இணைக்காமல், தொடர்பு இல்லாத பெரிய பாப்பனூத்து ஊராட்சி வார்டுகளை இணைத்துள்ளனர். இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதே போல் நகராட்சி பகுதியில் மறுவரையறை செய்யப்பட்டதில் சில தெருக்கள் வேறு வார்டுகளுடன் இணைக் கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளதில் உள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story