நெல்லை, தென்காசியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லை, தென்காசியில் நேற்று டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
மத்திய அரசு இந்திய மருத்துவ கவுன்சில் என்ற அமைப்பை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க முடிவு செய்து அந்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளது. இந்த மசோதாவை எதிர்த்து டாக்டர்கள் நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளின் டாக்டர்களும், அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றக்கூடிய டாக்டர்களும் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று காலை முதல் மாலை வரை தனியார் ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் பணியில் ஈடுபடவில்லை.
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றக்கூடிய டாக்டர்கள் நேற்று காலையில் பணிக்கு செல்லாமல் புறக்கணித்து வெளியே வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மருத்துவ சங்க நெல்லை மாவட்ட தலைவர் ஆதம்அலி தலைமை தாங்கினார். செயலாளர் நிர்மலா விஜயகுமார், பொருளாளர் பிரான்சிஸ்ராய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு டாக்டர்கள் சங்க தலைவர் முகமது ரபீக், செயலாளர் சித்தார்த் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையொட்டி நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் அவதிப்பட்டனர். வெளிநோயாளிகளுக்கான சிகிச்சை நடைபெறவில்லை. ஆனால் அவசர சிகிச்சை, அறுவைசிகிச்சை ஆகியவை நடந்தன.
இந்திய மருத்துவ சங்கம் குற்றாலம் கிளை சார்பில் நடந்த போராட்டத்தையொட்டி கடையநல்லூரில் இருந்து ஆலங்குளம் வரை குற்றாலம் கிளையில் உள்ள ஆஸ்பத்திரிகளும் நேற்று அடைக்கப்பட்டன. இதில் 300–க்கும் மேற்பட்ட டாக்டர்களும் கலந்து கொண்டனர். இதனால் நோயாளிகள் பெருமளவில் பாதிப்படைந்தனர்.
தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜெஸ்லின் தலைமை தாங்கினார். டாக்டர்கள் முத்தையா, முகைதீன் அகமது, ராமநாதன், லதா, மணிகண்டன், ஜோயல், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்த பின் பணியில் ஈடுபட்டனர். தனியார் ஆஸ்பத்திரிகள் அடைக்கப்பட்டதால் பலர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.