நாளை நடைபெறும் சர்க்கரை ஆலைகள் முற்றுகை போராட்டத்தில் விவசாயிகள் திரளாக கலந்து கொள்ளவேண்டும் மாவட்ட செயலாளர் வேண்டுகோள்


நாளை நடைபெறும் சர்க்கரை ஆலைகள் முற்றுகை போராட்டத்தில் விவசாயிகள் திரளாக கலந்து கொள்ளவேண்டும் மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 3 Jan 2018 3:45 AM IST (Updated: 3 Jan 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

தே.மு.தி.க. சார்பில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் சர்க்கரை ஆலைகள் முற்றுகை போராட்டத்தில் கட்சியினர், விவசாயிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர் வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழுப்புரம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:– விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 7 சர்க்கரை ஆலைகளில், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகைகளை வழங்காத 6 ஆலைகள் முன்பு நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. கடந்த 2014–ம் ஆண்டு முதல் இதுவரை தமிழகம் முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய கரும்பு நிலுவைத்தொகை 1,700 கோடியை வழங்காமல் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை ரூ.410 கோடியை வழங்காமல் உள்ளது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் 24–ந்தேதி விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத்தொகை வழங்க கோரி விஜயகாந்த் தலைமையில் விழுப்புரத்தில் ஆர்பாட்டம் நடந்தது. இதையடுத்து தமிழக அரசு 15 நாட்களுக்குள் நிலுவைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது. இருப்பினும் நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை.

இதையடுத்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்காத அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கண்டித்தும் ஜனவரி 4–ந்தேதி (வியாழக்கிழமை) தே.மு.தி.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளள முண்டியம்பாக்கம், செம்மேடு, பெரியசெவலை, கலையநல்லூர், திருக்கோயிலூர், மூங்கில்துறைப்பட்டு ஆகிய சர்க்கரை ஆலை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற இருக்கிறது. எனவே கட்சியனரும், கரும்பு விவசாயிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story