கர்நாடக சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் கமிஷனருக்கு மந்திரி பிரியங்க் கார்கே கடிதம்
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் தலைமை தேர்தல் கமிஷனருக்கு மந்திரி பிரியங்க் கார்கே கடிதம் எழுதி உள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் தலைமை தேர்தல் கமிஷனருக்கு மந்திரி பிரியங்க் கார்கே கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் மின்னணு வாக்கு எந்திரங்களை சோதனைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனருக்கு கர்நாடக சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி பிரியங்க் கார்கே கடிதம் எழுதினார். அதில் கூறி இருப்பதாவது:–
வாக்கு எந்திரங்கள் அறிமுகம்நாட்டில் தேர்தல் மூலம் ஜனநாயகத்தின் இயற்கைத்தன்மை நிலை நிறுத்தப்படுகிறது. 70 ஆண்டுகளாக நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட்டு வாக்காளர்கள் வாக்களித்து வருகிறார்கள். கிராம பஞ்சாயத்து முதல் பாராளுமன்ற தேர்தல் வரை மக்கள் தேர்தல் மூலம் ஜனநாயக அரசை தேர்வு செய்கிறார்கள். மின்னணு வாக்கு எந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டது தேர்தல் நடத்தும் முறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் மிக அதிகளவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு எந்திரங்களில் தவறுகள் நடப்பதாக சமீபகாலமாக சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதியையும் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இதுவும் தேர்தல் முறை மீதான நம்பிக்கையை அதிகரிப்பதாக உள்ளது. ஆனால் அந்த வி.வி.பேட் எந்திரங்களிலும் சந்தேகங்கள் எழும் வாய்ப்புகள் இருக்கின்றன.
தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள்வாக்காளர்களின் மனங்களில் எழுந்துள்ள இத்தகைய சந்தேகங்களை போக்க வேண்டியது அவசியம். அதனால் இந்த வாக்கு எந்திரங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இந்த மின்னணு வாக்கு எந்திரங்களில் தவறுகள் நடைபெற வாய்ப்பு உள்ளதா? என்பதை சோதிக்க ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு கர்நாடக அரசு சார்பில் கேட்கிறேன். தேர்தல் ஆணையத்துடன் கர்நாடக அரசு இணைந்து இதை நடத்த தயாராக இருக்கிறது.
இதில் அறிவியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள், தனியார் நிறுவனங்கள், வளர்ச்சி, ஆராய்ச்சி நிறுவனங்களை அழைக்கிறோம். இந்த சோதனையில் கிடைக்கும் முடிவுகள் பகிரங்கப்படுத்தப்படும். அரசியல் நோக்கம் இன்றி இது அறிவியல் அம்சமாக கருத வேண்டும். தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் 250 மின்னணு வாக்கு எந்திரங்களை சோதனை நடத்த வேண்டுகிறேன்.
உறுதியான நம்பிக்கைஇதில் தவறுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதை நாம் அனைவரும் சேர்ந்து சரிசெய்வோம். தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை என்பது நிரூபிக்கப்பட்டால் இதன் மூலம் வாக்காளர்களின் மத்தியில் இந்த தேர்தல் நடைமுறை மீது உறுதியான நம்பிக்கை ஏற்படும். மேலும் அது அதிகரிக்கும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.