கர்நாடக சட்டசபை தேர்தல் தேவேகவுடா ஆதரவை பெற திட்டமா? பா.ஜனதா கட்சி புதிய வியூகம்


கர்நாடக சட்டசபை தேர்தல் தேவேகவுடா ஆதரவை பெற திட்டமா? பா.ஜனதா கட்சி புதிய வியூகம்
x
தினத்தந்தி 3 Jan 2018 2:30 AM IST (Updated: 3 Jan 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பா.ஜனதா கட்சி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பா.ஜனதா கட்சி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தேவே கவுடாவை விமர்சிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி பா.ஜனதா தலைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். இது தேவேகவுடாவின் ஆதரவை பெற புதிய வியூகமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

கர்நாடக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

சட்டசபை தேர்தல்

தேர்தலுக்கு தயாராகும் பணிகளை ஆளும் காங்கிரஸ் உள்பட அனைத்துக்கட்சிகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டன. முதல்-மந்திரி சித்தராமையா சாதனை விளக்க பொதுக்கூட்டம் என்ற பெயரிலும், கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா ‘பரிவர்த்தனா யாத்திரை’ என்ற பெயரிலும், ஜனதா தளம்(எஸ்) தலைவர் குமாரசாமி ‘குமாரபர்வா’ என்ற பெயரிலும் பயணத்தை தொடங்கி தீவிர பிரசாரம் நடத்தி வருகிறார்கள்.

கர்நாடகத்தை பொறுத்தவரையில் கடந்த 5 ஆண்டுகளாக சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசு மீது பெரியதாக ஊழல் குற்றச்சாட்டுகள் எழவில்லை. அதனால் சித்தராமையா ஆட்சிக்கு எதிரான அலை என்பது பெரிதாக இல்லை. இது காங்கிரசுக்கு சாதகமாக இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜனதாவின் தலைவர் எடியூரப்பா, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என்று மக்களிடம் கூறி வருகிறார். அவருடைய இந்த பயணத்திற்கும் மக்களிடையே வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

வியூகம் வகுக்க...


இன்னொருபுறம் மாநில கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சியும் ஆட்சியை பிடிப்போம் என்று சூளுரைத்து மக்களின் ஆதரவை திரட்டி வருகிறது. ஆக, மூன்று கட்சிகளும் ஆட்சியை பிடிக்க மும்முரமாக களம் இறங்கியுள்ளன. இதுவரை வெளியாகியுள்ள கருத்து கணிப்புகளில் கர்நாடகத்தில் காங்கிரஸ், பா.ஜனதா இடையே கடும் போட்டி இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

எந்த கட்சிக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு சட்டசபை வரலாம் என்றும் சில கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அதுபோன்ற ஒரு நிலை வந்தால், மதசார்பற்ற கொள்கையை கொண்டுள்ள காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கின்றன. இதை தடுக்க பா.ஜனதா கட்சி இப்போது இருந்தே வியூகம் வகுக்க தொடங்கி இருக்கிறது.

ஏன் இந்த திடீர் மாற்றம்?


காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க சபதம் எடுத்துள்ள பா.ஜனதா, எப்பாடுபட்டாவது கர்நாடகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும், தென்இந்தியாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற தீவிர முனைப்பில் கட்சி பணிகளை ஆற்றி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, தொங்கு சட்டசபை அமைந்தால், தேர்தலுக்கு பிறகு ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க பா.ஜனதா கட்சி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்தார்.

அவர் ரெயில்வேத்துறை மந்திரியிடம் ஒரு கோரிக்கை மனுவை கொடுக்க விரும்பினார். ஆனால் பிரதமர் மோடி உத்தரவின்பேரில், சம்பந்தப்பட்ட ரெயில்வேத்துறை மந்திரி பியூஸ்கோயல் அவருடைய வீட்டுக்கே சென்று தேவேகவுடாவிடம் மனுவை பெற்று வந்தார். இது பலரது புருவங்களையும் உயர்த்தியது. இதற்கு முன்பு தேவேகவுடா பல முறை மத்திய மந்திரிகளை அவர்களின் அலுவலகங்களுக்கே சென்று சந்தித்து மனுக்கள் கொடுத்தார். இப்போது மத்திய அரசின் நடவடிக்கையில் ஏன் இந்த திடீர் மாற்றம்? அதன் பின்னணி என்ன? என்று அரசியல் நோக்கர்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுந்து உள்ளது.

விமர்சிக்க வேண்டாம்

சட்டசபை தேர்தலை மனதில் நிறுத்தி, தேவேகவுடாவை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று கர்நாடக பா.ஜனதா தலைவர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் மோடியை பெரியதாக குறை கூறக்கூடாது என்று ஜனதா தளம்(எஸ்) நிர்வாகிகளுக்கு தேவேகவுடா கட்டளை பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. தனக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் சித்தராமையாவுக்கு கடிவாளம் போட வேண்டும் என்று தேவேகவுடா விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அது அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றிக்கு பாதிப்பாக அமைந்து விடும் என்பதால் பிரதமர் மோடி உள்பட பா.ஜனதா தேசிய தலைவர்கள் இப்படி கணக்கு போடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Next Story