தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து கடலூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கடலூர்,
இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப்பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வகை செய்யும் மசோதாவை பாராளுமன்றத்தில் மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தனியார் ஆஸ்பத்திரிகளில் நேற்று காலை 6 மணி முதல் புற நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கவில்லை.
கடலூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்கன் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தால் தனியார் மருத்துவமனைகளில் நேற்று காலை 6 மணி முதல் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் புறநோயாளிகள் அவதிப்பட்டனர். ஆனால் அவசர சிகிச்சை, பிரசவம் மற்றும் உள்நோயாளிகளுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்திய மருத்துவ சங்கத்தின் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினரும் அரசு ஆஸ்பத்திரிகளில் நேற்று காலை சுமார் ஒரு மணி நேரம் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் காலை 9–30 மணி முதல் 10–30 மணி வரை அரசு டாக்டர்களின் பணிபுறக்கணிப்பு போராட்டம் நடந்தது. இதில் அனைத்து டாக்டர்களும் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் இந்திய மருத்துவ சங்க டாக்டர்களுடன் இணைந்து அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து மத்திய அரசின் முடிவுக்கு எதிராகவும், தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதை மத்திய அரசு திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் போட்டனர்.
இந்திய மருத்துவ சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் டாக்டர் ராஜேந்திரன் தலைமையில், கடலூர் மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் கேசவன் முன்னிலையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு டாக்டர்கள் சங்க செயலாளர் புலிக்கேசி, பொருளாளர் குலோத்துங்கன் உள்பட அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் விருத்தாசலத்தில் அரசு மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் டாக்டர் நவநீதம் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் சாதிக்பாட்ஷா, பொருளாளர் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் கோவிந்தசாமி, தமிழரசி ஆதிமூலம், குலோத்துங்கசோழன், புலிகேசி, அன்புச்செழியன், நளினி, முருகதாஸ், அழகுராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். தொடர்ந்து தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க புதிய மசோதா கொண்டு வந்துள்ள மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் கலந்து கொண்ட அனைவரும் கருப்பு பட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதற்கிடையே தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வகை செய்யும் மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப மத்திய அரசு ஒத்துக்கொண்டதால் நாடுதழுவிய போராட்டத்தை இந்திய மருத்துவ சங்கம் பிற்பகல் 3 மணி அளவில் வாபஸ் பெற்றுக்கொண்டது.