அரப்பனஹள்ளியில் நடக்க இருந்த பரிவர்த்தனா யாத்திரை, பா.ஜனதா பொதுக்கூட்டம் திடீர் ரத்து


அரப்பனஹள்ளியில் நடக்க இருந்த பரிவர்த்தனா யாத்திரை, பா.ஜனதா பொதுக்கூட்டம் திடீர் ரத்து
x
தினத்தந்தி 3 Jan 2018 2:30 AM IST (Updated: 3 Jan 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

கட்சியினர் இடையே ஏற்பட்ட போட்டியால் அரப்பனஹள்ளியில் நடக்க இருந்த பரிவர்த்தனா யாத்திரை மற்றும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தை எடியூரப்பா திடீரென ரத்து செய்து உத்தரவிட்டார்.

சிக்கமகளூரு,

கட்சியினர் இடையே ஏற்பட்ட போட்டியால் அரப்பனஹள்ளியில் நடக்க இருந்த பரிவர்த்தனா யாத்திரை மற்றும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தை எடியூரப்பா திடீரென ரத்து செய்து உத்தரவிட்டார்.

பரிவர்த்தனா யாத்திரை


தாவணகெரே மாவட்டம் அரப்பனஹள்ளியில் இன்று(புதன்கிழமை) எடியூரப்பாவின் ‘பரிவர்த்தனா யாத்திரை’ எனும் மாற்றத்திற்கான பயணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அரப்பனஹள்ளியைச் சேர்ந்த பா.ஜனதாவின் தீவிர தொண்டர் கொட்ரேஷ், முன்னாள் மந்திரி கருணாகர் ஆகியோர் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கொட்ரேஷ் அரப்பனஹள்ளியில் உள்ள தாலுகா விளையாட்டு மைதானத்தில் பா.ஜனதா கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தனியாக செய்து வந்தார். இதையறிந்த முன்னாள் மந்திரி கருணாகர், அரப்பனஹள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பா.ஜனதா கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

ரத்து

இருவரும் கருத்து வேறுபாட்டால் தனித்தனியாக பா.ஜனதா கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதுபற்றி எடியூரப்பாவுக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் அவர் இதுபற்றி விசாரணை நடத்தினார். அப்போது கொட்ரேசும், முன்னாள் மந்திரி கருணாகரும் தேர்தலில் டிக்கெட் கேட்கும் போட்டியில் இப்படி தனித்தனியாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இதனால் கடும் கோபமடைந்த எடியூரப்பா, அரப்பனஹள்ளியில் நடைபெற இருந்த பரிவர்த்தனா யாத்திரை மற்றும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். மறு தேதி குறிப்பிடாமல் அவை இரண்டும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்சியினர் இடையே ஏற்பட்ட போட்டியால் கடைசி நேரத்தில் எடியூரப்பாவின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், அரப்பனஹள்ளியில் பா.ஜனதா தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story