எட்டயபுரத்தில், பள்ளிக்கூடம் முன்பு ஆசிரியை தர்ணா போராட்டம்
எட்டயபுரத்தில், நிரந்தர தமிழ் ஆசிரியை பணியிடத்தில் வேறொருவர் நியமிக்கப்பட்டதை கண்டித்து பள்ளிக்கூடத்தின் முன்பு நுவு வாயிலில் உறவினர்களுடன் அமர்ந்து தற்காலிக ஆசிரியை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
எட்டயபுரம்,
கோவில்பட்டியை சேர்ந்த ராமசாமி மகள் ஹரிணிகாஸ்ரீ (வயது 40). இவர், எட்டயபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளிக்கூடத்தில் கடந்த 2009–ம் ஆண்டு தற்காலிக தமிழ் ஆசிரியையாக வேலையில் சேர்ந்தார். அப்போது அவருக்கு அந்த பள்ளியிலேயே நிரந்தர வேலை தருவதாக கூறி, ஹரிணிகாஸ்ரீயிடம் பள்ளி செயலாளர் ரூ.13 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
பின்னர், கடந்த 2014–ம் ஆண்டு அவருக்கு பதிலாக மற்றொரு ஆசிரியையை பள்ளி செயலாளர் நிரந்தர பணியிடத்தில் நியமித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், கடந்த 17–7–2014 அன்று பள்ளியின் முன்பு தீக்குளிக்க முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றினர். பின்னர் அவர் இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதை தொடர்ந்து பள்ளியில் அந்த ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்தது.
இந்த நிலையில், அந்த ஆசிரியர் பணியிடத்தில் மற்றொரு ஆசிரியையை பள்ளி செயலாளர் மீண்டும் நியமித்தார். இதனை அறிந்த அவர், நேற்று காலையில் பள்ளிக்கூடத்தின் முன்பு தன்னுடைய உறவினர்களுடன் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே எட்டயபுரம் தாசில்தார் சூர்யகலா, போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துலட்சுமி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) மாவட்ட கல்வி அதிகாரிகள் முன்னிலையில், சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மதியம் அவர் தன்னுடைய உறவினர்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.