நெல்லை- தூத்துக்குடியில் இருந்து 9 யானைகள் புறப்பட்டு சென்றன


நெல்லை- தூத்துக்குடியில் இருந்து 9 யானைகள் புறப்பட்டு சென்றன
x
தினத்தந்தி 3 Jan 2018 5:30 AM IST (Updated: 3 Jan 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் நடைபெறும் நலவாழ்வு முகாமுக்கு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 9 யானைகள் நேற்று மாலை புறப்பட்டு சென்றன.

நெல்லை,

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் தேக்கம்பட்டி பவானி ஆறு பகுதியில் இந்த முகாம் நடக்கிறது.

இந்த ஆண்டு நாளை (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) மாதம் 20-ந் தேதி வரை இந்த முகாம் நடக்கிறது. இதையொட்டி நெல்லை இணை ஆணையர் மண்டலத்தில் உள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 9 யானைகள் நேற்று புறப்பட்டு சென்றன.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் உள்ள யானை காந்திமதி நேற்று மாலை புறப்பட்டு சென் றது. கோவிலில் இருந்து சிறப்பு கற்பூர வழிபாடு நடத்தி யானை வழி அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து யானை நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல் நிலைப்பள்ளிக்கு அழைத்து வரப்பட்டது. அங்குள்ள மேடையில் யானை ஏற்றப்பட்டு அதில் இருந்து லாரியில் யானையை ஏற்றி அங்கும் கற்பூரம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தி யானை காந்திமதி வழிஅனுப்பி வைக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை நெல்லை மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, கோவில் செயல் அலுவலர் ரோஷினி, கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் யானையை வழி அனுப்பி வைத்தனர். யானையுடன் பாகன்கள் பாலகிருஷ்ணன், ராமதாஸ், விஜயகுமார், கோவில் பணியாளர்கள் வெங்கடேஷ், வேல்சாமி மற்றும் கால்நடை மருத்துவ குழுவினரும் சென்றனர்.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில் யானை கோமதி, இலஞ்சி குமாரர் கோவில் யானை வள்ளி, திருக்குறுங்குடி யானைகள் குறுங்குடி வள்ளி மற்றும் சுந்தரவள்ளி ஆகிய யானைகளும் நேற்று தனித்தனியாக லாரிகளில் ஏற்றி நலவாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த முகாமில் பங்கேற்பதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை, தெய்வானையைநேற்று மாலையில் லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். முன்னதாக தெய்வானை யானைக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் வேலவன் விடுதி முன்பு லாரியை நிறுத்தி, அதில் தெய்வானை யானையை ஏற்றினர். தொடர்ந்து கோவில் இணை ஆணையர் பாரதி கொடி அசைத்து, தெய்வானை யானையை வழியனுப்பி வைத்தார். கோவில் உதவி ஆணையர் ராமசாமி, முதுநிலை கணக்கு அலுவலர் மதிவாணன், அலுவலக கண்காணிப்பாளர் நாராயணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதேபோன்று ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் யானை ஆதிநாயகி, இரட்டை திருப்பதி கோவில் யானை லட்சுமி, திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் குமுதவல்லி யானை ஆகியவற்றை ஆழ்வார்திருநகரி தெப்பக்குளம் அருகில் வைத்து, தனித்தனியாக 3 லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர். உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, உதவி பொறியாளர் திருநாகலிங்கம், கோவில் செயல் அலுவலர்கள் விசுவநாத், அஜித், கோவில் ஆய்வாளர் ரவீந்திரன், ஆழ்வார்திருநகரி எம்பெருமனார் ஜீயர், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் பலர் உடன் இருந்தனர். இந்த யானைகளுடன் பாகன்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் புறப்பட்டுச் சென்றனர்.

இந்த யானைகள் மதுரை பகுதிக்கு சென்று, தென் மாவட்டங்களில் இருந்து வருகிற மற்ற யானைகளுடன் சேர்ந்து ஒரே நேரத்தில் மேட்டுப்பாளையம் நோக்கி அழைத்து செல்லப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story