சட்டமன்ற உரிமை மீறல் குழு முன்பு அரசு சார்பு செயலாளர் கண்ணன் ஆஜர்


சட்டமன்ற உரிமை மீறல் குழு முன்பு அரசு சார்பு செயலாளர் கண்ணன் ஆஜர்
x
தினத்தந்தி 3 Jan 2018 4:30 AM IST (Updated: 3 Jan 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க உத்தரவிட்ட விவகாரம் தொடர்பாக சட்டமன்ற உரிமை மீறல் குழுவின் முன்பு அரசு சார்பு செயலாளர் கண்ணன் நேற்று ஆஜரானார். அப்போது எழுத்து பூர்வமாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மேலும் மாநில அரசின் பரிந்துரையின் பேரில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்துக்கொள்ள மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் மாநில அரசு பரிந்துரை செய்யாமலே கடந்த 23.6.2017 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது.

இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் 4.7.2017 அன்று தங்களை பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று சபாநாயகரை அணுகினர். சபாநாயகர் உரிய ஆவணங்கள் வந்த பின் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அவர்களை அங்கீகரிக்க மறுத்து விட்டார். இதனை தொடர்ந்து அன்றைய தினம் இரவே கவர்னர் மாளிகையில் அவர்கள் 3 பேருக்கும் கவர்னர் கிரண்பெடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதனை தொடர்ந்து அவர்கள் 3பேரும் தங்களுக்கு பேரவையில் இடமும், பேரவை வளாகத்தில் அலுவலகம், அடையாள அட்டை, சம்பளம் வழங்கக் கோரி சபாநாயகரிடமும், சட்டமன்ற செயலரிடமும் மனு அளித்தனர். ஆனால் சபாநாயகர் வைத்திலிங்கம் அதற்கும் மறுத்துவிட்டார்.

இதற்கிடையில் முதல்- அமைச்சர் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ, மாநில அரசின் பரிந்துரையின்றி, மத்திய அரசு நேரடியாக நியமன எம்.எல்.ஏ.க்களை நியமனம் செய்தது தவறு எனக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி புதுச்சேரி அரசின் சார்பு செயலாளர் கண்ணன் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கான ஊதியம், படிகள் மற்றும் இதர சலுகைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டமன்ற செயலர் வின்சென்ட் ராயருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக அவர்கள் 3 பேரும் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டு இருப்பதால் சம்பளம் உள்ளிட்ட எந்த சலுகைகளும் வழங்க முடியாது என்று சபாநாயகர் வைத்திலிங்கம், சட்டமன்ற செயலாளர் வின்சென்ட் ராயர் மூலம் சார்பு செயலாளர் கண்ணனுக்கு கடிதம் அனுப்பினார்.

இதனைத் தொடர்ந்து அரசு செயலாளர் மீது அரசு கொறடா அனந்தராமன் உரிமை மீறல் புகார் எழுப்பினார். மேலும் இது தொடர்பாக சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தும் படி உரிமை மீறல் குழுவின் தலைவரும், துணை சபாநாயகருமான சிவக்கொழுந்துவிடம் அனுப்பி விட்டார். அவர் இந்த புகாருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி அரசின் சார்பு செயலாளர் கண்ணனுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை சட்டமன்ற உரிமை மீறல் குழு கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் கூடியது. கூட்டத்திற்கு துணை சபாநாயகரும், குழுவின் தலைவருமான சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள் லட்சுமி நாராயணன், சிவா, பாஸ்கர், எம்.என்.ஆர். பாலன், சட்டமன்ற செயலாளர் வின்சென்ட் ராயர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முன்பு அரசின் சார்பு செயலாளர் கண்ணன் ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இது குறித்து சட்டமன்ற உரிமை மீறல் குழுவின் தலைவர் சிவக்கொழுந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க உத்தரவிட்ட விவகாரம் தொடர்பாக அரசின் சார்பு செயலாளர் கண்ணன் மீது சட்டமன்ற உரிமை மீறல் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக குழுவின் முன்பு ஆஜராகும் படி அவருக்கு உத்தரவிடப்பட்டது. அவர் இன்று(நேற்று) குழுவின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தை அவர் வாய் வழியாக கூறினார். நாங்கள் எழுத்து பூர்வமாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டோம். அவர் எழுத்து பூர்வமாக அளிக்க கால அவகாசம் கேட்டார். எனவே வருகிற 9-ந் தேதி சட்டமன்ற உரிமை மீறல் குழுவின் முன்பு ஆஜராகி எழுத்து பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story