மத்திய அரசின் புதிய மசோதாவை திரும்ப பெறக்கோரி டாக்டர்கள் வேலை நிறுத்தம்


மத்திய அரசின் புதிய மசோதாவை திரும்ப பெறக்கோரி டாக்டர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 3 Jan 2018 4:30 AM IST (Updated: 3 Jan 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் புதிய மசோதாவை திரும்ப பெறக்கோரி திருச்சியில் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வகை செய்யும் புதிய மசோதாவை மத்திய சுகாதாரத்துறை மந்திரி கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த புதிய மசோதாவுக்கு நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த புதிய மசோதாவை திரும்ப பெறக்கோரி திருச்சியில் தனியார் டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் டாக்டர் சுரேந்திரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் புதிய மசோதாவை திரும்ப பெறக்கோரி நேற்று திருச்சி மாநகர் பகுதியில் உள்ள 170 தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் தொடர்ந்தது. இதனால் தனியார் டாக்டர்கள் யாரும் அவரவர் ஆஸ்பத்திரிக்கு செல்ல வில்லை. அவசர சிகிச்சை அளிப்பதற்காக மட்டும் ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் ஒரு டாக்டர் மட்டும் பணியில் அமர்த்தி இருந்தோம். அவர்கள் அவசர சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

அதேபோன்று ஒரு சில நர்சுகள் மட்டும் பணியில் அமர்த்தி இருந்தோம். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் திருச்சி கிளையில் உள்ள 1,300 உறுப்பினர்களும் ஈடுபட்டனர். நாளை (இன்று) வழக்கம் போல் ஆஸ்பத்திரிகளில் திறக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நேற்று நோயாளிகள் பாதிப்பு அடைந்தனர்.

இதே போன்று இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம் ஆகியவை சார்பில் நேற்று காலை திருச்சி அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் டாக்டர் பிரபாகரன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட டாக்டர்கள் பலர் கறுப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர். இதில் பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

Next Story