மூடப்பட்ட பாதையை திறக்கக்கோரி தொழிலாளர் குடும்பத்தினர் போராட்டம்
சேலம் கிழக்கு ரெயில்வே குடியிருப்பு காலனியில் மூடப்பட்ட பாதையை திறக்கக்கோரி தொழிலாளர் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.
சேலம்,
சேலம் ரெயில்வே கோட்டம் அருகில் கிழக்கு ரெயில்வே காலனி உள்ளது. இங்கு 200–க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த காலனியில் இருந்து ரெட்டிப்பட்டிக்கு செல்ல பாதை இருந்தது. இந்த பாதை கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரெயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் மூடப்பட்டது.
மேலும் ரெயில்வே கோட்ட அலுவலகம் செல்லும் வழியில்தான் இனி செல்ல வேண்டும் எனவும் குடியிருப்பு காலனி தொழிலாளர் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த பாதை மூடப்பட்டதால், அங்கு வசிப்பவர்கள் 1 கிலோ மீட்டர் தூரம் சுற்றித்தான் ஜங்சன் மற்றும் ரெட்டிப்பட்டி பகுதிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் கிழக்கு ரெயில்வே காலனியில் குடியிருக்கும் தொழிலாளர் குடும்பத்தினர் 50–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று, மூடப்பட்ட பாதையை திறந்துவிடக்கோரி காலனி நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சேலம் சூரமங்கலம் போலீசார் உடனடியாக விரைந்து வந்து, போராட்டம் நடத்தியவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், சமாதானம் அடையாத அவர்கள், மூடப்பட்ட பாதையில் உள்ள கேட்டின் பூட்டை உடைத்து திறந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் சூரமங்கலம் போலீசில், கிழக்கு ரெயில்வே காலனி குடியிருப்பு தொழிலாளர்கள் தரப்பில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், மூடப்பட்ட பாதையை நிரந்தரமாக திறந்து விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. போலீஸ் தரப்பில், ரெயில்வே கோட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.