தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதை கண்டித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதை கண்டித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2018 4:30 AM IST (Updated: 3 Jan 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதை கண்டித்து அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் ஒரு மணி நேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

பெரம்பலூர்,

மருத்துவக்கல்வி தொடர்பான பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக “தேசிய மருத்துவ ஆணையம்” என்கிற புதிய அமைப்பை உருவாக்குவது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நேற்று விவாதத்துக்கு வந்தது. எனினும் தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.) சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் புதிய மசோதாவை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவர்கள்-பட்ட மேற் படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவ மனையில் நேற்று காலை ஒரு மணி நேரம் டாக்டர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை ரத்து செய்து பழைய ஆணையம் செயல்பட வழிவகை செய்ய வேண்டும், பயிற்சி முடித்த மருத்துவர்களுக்கான “எக்ஸிட்” தேர்வை ரத்து செய்ய வேண்டும், சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவர்கள் அலோபதி மருத்துவத்திற்கு வருவதை அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். மாவட்ட செயலாளர் டாக்டர் ரமேஷ் தலைமை தாங்கினார். சுதாகர், தேவேந்திரன், ஜாபர், சிவக்குமார், சரவணன், கலா, சவீதா, சூர்ய பிரபா உள்பட 50-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

வேப்பூர், காரை, கிருஷ்ணாபுரம் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைகளிலும் ஒரு மணிநேரம் அரசு டாக்டர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதே போல் பெரம்பலூரிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களும் நேற்று காலையிலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகளாக வந்தவர் களுக்கு சிகிச்சை அளிக்கப் படாததால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அரியலூரில் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் டாக்டர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story