கடத்தல் விவகாரத்தால் பதற்றம்: ‘நாங்கள் விரும்பியே ஊரை விட்டு வெளியேறி உள்ளோம்’ கடிதத்தால் பரபரப்பு


கடத்தல் விவகாரத்தால் பதற்றம்: ‘நாங்கள் விரும்பியே ஊரை விட்டு வெளியேறி உள்ளோம்’ கடிதத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Jan 2018 3:45 AM IST (Updated: 4 Jan 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே கடத்தல் விவகாரத்தால் பதற்றம் உருவாகியுள்ள சூழ்நிலையில் ‘நாங்கள் விரும்பியே ஊரை விட்டு வெளியேறி உள்ளோம்’ என்று மாணவி எழுதியதாக போலீசாருக்கு வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வன்னியர் தெருவை சேர்ந்தவர் பிரியங்கா(வயது22). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். நல்லம்பள்ளி ஆதிதிராவிடர் காலனி அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(23). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த இந்த 2 பேரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி கல்லூரியில் இருந்து ஊருக்கு சென்று வருவதாக புறப்பட்ட மாணவி பிரியங்கா வீட்டுக்கு வராமல் மாயமானார்.

இதேபோல் ராஜ்குமாரும் வீட்டில் இருந்து மாயமானார். இந்த நிலையில் ராஜ்குமார் தங்கள் மகளை கடத்தி சென்றதாக பிரியங்காவின் பெற்றோர் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த விவகாரம் தொடர்பாக நல்லம்பள்ளியில் இருதரப்பை சேர்ந்தவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் மோதல் உருவாகும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து தர்மபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த போலீசார் நல்லம்பள்ளி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சோதனை சாவடிகள்

இந்த நிலையில் பெட்ரோல் குண்டு தயாரித்ததாக ஒரு தரப்பை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 61 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் தகராறில் ஈடுபட்டதாக மற்றொரு தரப்பை சேர்ந்த மாணவி பிரியங்காவின் அண்ணன் விஜய்விஸ்வநாதன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் 31 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நக்சல்பிரிவு, கியூபிரிவு மற்றும் பிற உளவுப்பிரிவுகளை சேர்ந்த போலீசாரும் கடந்த 4 நாட்களாக இந்த பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

கடிதம்

இந்தநிலையில் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் முகவரிக்கு ஒரு பதிவு தபால் வந்தது. இந்த பதிவு தபாலில் பிரியங்கா, வன்னியர் தெரு, நல்லம்பள்ளி என அனுப்புனர் முகவரி இருந்தது. இந்த தபாலில் மாணவி பிரியங்கா தனது கருத்தை பதிவு செய்வது போல், நாங்கள் கடந்த 4 வருடங்களாக காதலித்தோம். என்னை யாரும் கடத்தவில்லை. நாங்கள் இருவரும் மேஜர். நாங்கள் விரும்பியே ஊரைவிட்டு வெளியேறி உள்ளோம். ஆகையால் எனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என எழுதப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தை மாணவி பிரியங்காதான் எழுதி பதிவு தபால் மூலம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி உள்ளாரா? என தெரியவில்லை. மாணவி கடத்தப்பட்டு வெளியூரில் இருக்கும் சூழ்நிலையில் வன்னியர் தெரு, நல்லம்பள்ளி என அனுப்புனர் முகவரி இருப்பதால் கடிதம் போலியானதாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அந்்த தபாலில் இருப்பது பிரியங்காவின் கையெழுத்துதானா? என உண்மைத்தன்மையை தெரிந்து கொள்ளும் வகையில், அவரது நோட்டு புத்தகங்களை முதற்கட்டமாக போலீசார் ஆய்வு செய்ய தொடங்கி உள்ளனர். மேலும் காதல்ஜோடி எங்கே உள்ளனர்? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே, கடிதம் மூலம் மாணவி பிரியங்காவின் பெயரை பயன்படுத்தி பரபரப்பை உண்டாக்கும் நோக்கில் யாராவது செயல்பட்டது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இந்த கடிதம் விவகாரம் நல்லம்பள்ளியில் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story