பட்டாசு தொழிலை பாதுகாக்கக்கோரி சிவகாசியில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பட்டாசு தொழிலை பாதுகாக்கக் கோரி நேற்று சிவகாசி பகுதியில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது. மேலும் அனைத்துக் கட்சியினர் தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
சிவகாசி,
சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் 850–க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. தீபாவளி பண்டிகை முடிந்த சில மாதங்களிலேயே அடுத்த வருடத்திற்கான பட்டாசு ஆர்டர் வழங்கி முன்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் உச்சநீதி மன்றத்தில் பட்டாசுக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளதால் ஆர்டர்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையில் தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் விரைந்து தீர்ப்பு வழங்கக் கோரியும், பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்க எந்தவித தடையும் ஏற்படாதவாறு சட்ட திருத்தம் செய்ய வலியுறுத்தியும் கடந்த 26–ந் தேதி முதல் பட்டாசு ஆலை அதிபர்கள் உற்பத்தியை நிறுத்தி ஆலைகளை மூடிவிட்டனர். இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாகவும், பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும் நேற்று அனைத்துக் கட்சி சார்பில் சிவகாசி பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களுமான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, முன்னாள் எம்.பி.அழகர்சாமி, முன்னாள் காங்கிரஸ் நகர்மன்ற தலைவர் ஞானசேகரன், மாவட்ட தலைவர் ராஜா சொக்கர், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் உள்பட பல கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து காமராஜர் சிலை முன்பு தொடங்கி ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மனு அளித்தனர். இதில் பட்டாசு தொழிலில் உள்ள ஆண், பெண் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளை களைய வலியுறுத்தி சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.