இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை: நெல்லை–தென்காசி சாலையில் இரவில் அட்டூழியம் செய்யும் கொள்ளையர்கள்
நெல்லை–தென்காசி சாலையில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
நெல்லை,
நெல்லை–தென்காசி சாலையில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அந்த பகுதிகளில் கொள்ளையர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. இதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
கொள்ளையர்கள் அட்டூழியம்நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரம் பகுதிகளை சேர்ந்தவர்கள் நெல்லையில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், கடைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் ஊர்களில் இருந்து நெல்லைக்கு இருசக்கர வாகனங்களில் வேலைக்கு வந்து செல்கிறார்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் பணி முடிந்து இரவு 7 மணிக்கு பின்னர்தான் நெல்லையில் இருந்து தங்களது ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள். இப்படி இருசக்கர வாகனங்களில் செல்பவர்களிடம் வழிப்பறி கொள்ளையர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமான, ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் நின்று கொண்டு பணம், நகைகள், பொருட்களை அபகரித்து சென்று விடுகிறார்கள். அதிலும் சமீப காலமாக வழிப்பறி கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது.
கணவர் கண்முன்பு பாலியல் பலாத்காரம்கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரவு 10 மணி அளவில் நெல்லையில் இருந்து செங்கோட்டை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் ஒரு இளம் தம்பதியினர் சென்று உள்ளனர். நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் நெல்லை அருகே உள்ள காட்டு பகுதியில் சென்று கொண்டு இருந்த அந்த தம்பதியிரை 3 பேர் கொண்ட கும்பல் கையை காட்டி மோட்டார் சைக்கிளை வழிமறித்து உள்ளனர்.
இரவு நேரத்தில் 3 பேர் வந்து மோட்டார் சைக்கிளை வழிமறித்ததால் பயந்துபோய் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். உடனே அந்த கும்பல் கணவன்–மனைவி இருவரையும் அரிவாளை காட்டி மிரட்டி அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று உள்ளனர்.
அந்த வாலிபரை அடித்து உதைத்து அங்கு இருந்த பனை மரத்தில் கட்டி வைத்து உள்ளனர். பின்னர் அந்த வாலிபரின் கண்முன்னே அவரது மனைவியை அவர்கள் 3 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். பின்னர் அந்த பெண் அணிந்து இருந்த 7 பவுன் தங்க நகைகளையும், அந்த இளைஞர் அணிந்து இருந்த 5 பவுன் தங்க நகைகளையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
மனைவி தற்கொலை; கணவருக்கு மனநிலை பாதிப்புஇதன்பிறகு கணவன்–மனைவி இருவரும் மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏறி தங்களுடைய ஊருக்கு சென்று உள்ளனர். வீட்டிற்கு சென்றவுடன் நடந்த சம்பவத்தால் மனம் உடைந்த கணவனும், மனைவியும் இரவு முழுவதும் தூங்காமல் கதறி அழுத வண்ணம் இருந்துள்ளனர். மறுநாள் காலையில் அந்த பெண், தனது ஆண் குழந்தையை சகோதரியின் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு சகோதரியிடம் தனக்கு நடந்த கொடுமையான சம்பவத்தை தெரிவித்து கதறி அழுது உள்ளார்.
பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு வந்த அந்த பெண் உயிர் வாழ விரும்பாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது கண் முன்னால் தனது மனைவிக்கு நேர்ந்த கொடுமையை தடுக்க முடியாததையும், இந்த சம்பவத்தால் தனது மனைவி உயிரை மாய்த்துக்கொண்டதையும் நினைத்து, நினைத்து புலம்பிய அந்த வாலிபர் தற்போது மனநிலை பாதிக்கப்பட்டு நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற வேதனையான சம்பவத்தை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்றே சொல்ல வேண்டும்.
போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?நடந்த இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் போலீசில் புகார் எதுவும் செய்யவில்லை. ஆனால் இந்த பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள், வழிப்பறி சம்பவங்கள் சமீப காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே இனிமேலும் இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சீதபற்பநல்லூர் போலீசார் மற்றும் ஆலங்குளம் போலீசார் நெல்லை–தென்காசி செல்லும் சாலையில் இரவு நேரத்தில் ரோந்து செல்ல வேண்டும்.
இந்த சாலையில், இரவு நேரங்களில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிகின்ற மற்றும் ரோட்டு ஓரத்தில் அமர்ந்து மது குடிக்கின்றவர்களை பிடித்து விசாரணை நடத்தி இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?