வத்தலக்குண்டுவில் நிதிநிறுவனம் முன்பு இளம்பெண் தர்ணா


வத்தலக்குண்டுவில் நிதிநிறுவனம் முன்பு இளம்பெண் தர்ணா
x
தினத்தந்தி 4 Jan 2018 4:00 AM IST (Updated: 4 Jan 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டுவில் சான்றிதழ்களை தரக்கோரி நிதிநிறுவனம் முன்பு இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வத்தலக்குண்டு,

வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் அக்பர்அலி. அவருடைய மனைவி யாஸ்மின் (வயது 25). இவர் நிலக்கோட்டையில் உள்ள ஒரு நிதிநிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பின்னர் சொந்த வேலை காரணமாக கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு வேலையை விட்டு விலகுவதாக தெரிவித்தார்.

மேலும் வேலைக்கு சேர்ந்தபோது தான் வழங்கிய அசல் சான்றிதழ்களை கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். சில நாட்களில் தருவதாக நிதிநிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் சான்றிதழ்களை கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிதிநிறுவனத்தில் சென்று கேட்டால் கேரளாவில் உள்ள அலுவலகத்தில் சான்றிதழ் உள்ளதாகவும், வந்தவுடன் தருவதாகவும் கூறியுள்ளனர்.

தொடர்ந்து அலைக்கழித்து வந்ததால் மனமுடைந்த யாஸ்மின், இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சான்றிதழ்களை வழங்கக்கோரி வத்தலக்குண்டு–மதுரை சாலையில் அதே நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு நிதிநிறுவனம் முன்பு யாஸ்மின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நிதிநிறுவன அதிகாரிகள் ஒரு வாரத்தில் சான்றிதழ்களை வழங்குவதாக உறுதி கூறினர். இதை ஏற்றுக்கொண்ட அந்த இளம்பெண் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story