திண்டுக்கல்லில், மாயமான பள்ளி மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி சாலை மறியல்
திண்டுக்கல்லில், மாயமான பள்ளி மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மக்கான் தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 40). டீக்கடையில் வேலைசெய்து வருகிறார். இவருடைய மகள் சப்னம் பாத்திமா (13). இவர், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு காந்திஜி புதுரோட்டில் உள்ள ஒரு கடைக்கு சப்னம் பாத்திமா பேப்பர் வாங்குவதற்காக சென்றார்.
பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவருடைய பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் மாயமான மாணவியை விரைவில் கண்டுபிடிக்க வலியுறுத்தி, மக்கான் தெருவை சேர்ந்த பொதுமக்கள் திண்டுக்கல் அங்குவிலாஸ் இறக்கம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் சமரசம் அடையாத பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே போலீஸ் துணை சூப்பிரண்டு சிகாமணி அங்கு வந்தார். அவர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரமாக நடந்த இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.